உக்ரைன் கிழக்குப் பகுதியில் ரஷியா தலையிடுவதாக கூறப்படும் நிலையில், பிரச்னைக்குத் தீர்வு காணும் முயற்சியாக அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன், உக்ரைனுக்கு திங்கள்கிழமை சென்றார்.
தங்களை காப்பாற்றும்படி ரஷிய அமைதிப் படையினரிடம் ரஷிய ஆதரவாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், அவர் 2 நாள் அங்கு தங்கியிருந்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
உக்ரைனின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள ஸ்லாவ்யான்ஸ்க் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்புப் படையினருக்கும், ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது.
அப்போது, 2 ரஷிய ஆதரவாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதல் சம்பவம் கொடூரமானது என ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தால் ரஷியா கடும் கோபம் அடைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் பிடன் இந்தச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இதனிடையே, “அந்தப் பகுதியில் நிகழ்ந்த வன்முறை ரஷியாவால் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகமாகும். உக்ரைனுக்குள் தனது படையை அனுப்புவதற்கான சாக்குப்போக்கை ரஷியா உருவாக்க முயற்சிக்கிறது’ என்று மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.
ஜெனீவாவில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, “சட்டத்துக்குப் புறம்பாக உக்ரைனில் அரசு கட்டடங்களைக் கைப்பற்றியுள்ள ஆயுதம் ஏந்திய கும்பல் வெளியேற வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டது.
உக்ரைன் எல்லையில் 40,000 வீரர்களை ரஷியா குவித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், உக்ரைனுடன் போரிட ரஷியா மும்முரமாக உள்ளது என்றும், அண்டை நாடான போலந்திற்கு தனது காலாட்படையை அனுப்ப தயாராகிக் கொண்டிருக்கிறது என்றும் “நேட்டோ’ கூறியதாக அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
புதின் உறுதி: இதற்கிடையே, ஸ்லாவ்யான்ஸ்க்கில் பிரிவினைவாத தலைவரான வியாச்செஸ்லாவ் பொனோமார்யோவ் கூறுகையில், “”பாதுகாப்புப் படை நடத்திய தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். உக்ரைனில் பொதுவுடைமைவாதிகளுக்கு எதிராக நடத்தப்படும் இத்தகைய தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க ரஷிய அதிபர் புதின் அமைதிக் காப்பு படையை அனுப்ப வேண்டும்” என்றார்.