குலா: மலேசிய தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும்

 

Visit to INdian ECஇந்திய நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. கட்டங்கட்டமாக நடத்தப்படும் அப்பொதுத் தேர்தல் ஏப்ரல் 12 தொடங்கியது. 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான அத்தேர்தல் மே 12 இல் முடிவுக்கு வரும்.

500 மில்லியன் தகுதி வாய்ந்த வாக்காளர்கள் சம்பந்தப்பட்ட அத்தேர்தல் உலகில் மிக அதிகாமான வாக்காளர் எண்ணிக்கையைக் கொண்டதாகும்.

இந்த மாபெரும் பொதுத் தேர்தலை நேரடியாக காண்பதற்காக பேராக் மாநில சட்டமன்ற உறுப்பினர் எ. சிவநேசன், டிஎபி ஈப்போ கிளைத் தலைவர் சேகரன் மற்றும் கிள்ளான் பிகேஆர் உறுப்பினர் வேம்பரசன் ஆகியோருடன் தாமும் இந்தியாவுக்கு சென்றதாக டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

ஏப்ரல் 16 இல், சென்னை சென்றடைந்த அவர்களை அடுத்த நாள் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழ் நாடு தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

“நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்பது குறித்து எங்களுக்கு தேர்தல் ஆணையத் தலைவர் பர்வீன் குமார் விளக்கம் அளித்ததோடு எங்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்”, என்று கூறுகிறார் குலா.

அவர் கூறியவற்றில் சில:

1) ஒரு நாடாளுமன்ற வேட்பாளர் ரூபாய் 40 இலட்சம் வரையில் செலவிடலாம். (நாடாளுமன்றத்திற்கு போட்டியிடும் மலேசிய வேட்பாளர் ரிம2 இலட்சம் வரையில் செலவிடலாம்.)

2) வேட்பாளர்கள் அவர்களின் தொகுதிகளில் பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் போடுவதற்கு அனுமதி கிடையாது. ஆனால், தேர்தலின் போது, ஒரு வேட்பாளர் பொதுக் கூட்டம் அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் பொதுமக்களுடன் சந்திப்பு நடத்தினால் அந்த வேட்பாளர் நிகழ்ச்சி தொடங்குவதற்கு 12 மணி நேரத்திற்கு முன்னால் பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளைப் பயன்படுத்தலாம். அந்நிகழ்ச்சி முடிவுற்ற 4 மணி நேரத்திற்குள் அவற்றை அவர் அகற்ற வேண்டும்

3) வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் படம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வாக்களிப்பு மையத்தில் சிசிடிவி கேமராக்களும் வீடியோக்களும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நடவடிக்கை ஏமாற்றுதல் மற்றும் ஆவி வாக்காளர்கள் வாக்களிப்பது போன்றவற்றை தடுக்கின்றது.

4) நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் ஊராட்சி மன்றங்கள், மாநில அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட தேர்ந்துதெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் வாக்காளர்களைக் கவருவதற்காக புதிய கொள்கை அல்லது செயல்திட்டங்கள் எதனையும் அறிவிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் சென்னை மாநகர் மேயரை சந்திப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்ச்சிக்கான சில மணி நேரத்திற்கு முன்பு தேர்தல் ஆணையம் எங்களை அழைத்து அந்தச் சந்திப்பை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்டது. இச்சந்திப்பு மேயரின் கட்சிக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதைத் தடுப்பது இதன் நோக்கமாகும்.

5) எலெக்ட்ரோனிக் முறையிலான வாக்களிப்பு நடைமுறை எங்களுக்கு காண்பிக்கப்பட்டது. நாங்கள் சென்னையிலுள்ள ஒரு பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு எங்களுடைய விரலில் அழியா மை இடப்பட்டது. (ஒரு வாரம் ஆகியும் அந்த மை என்னுடைய விரலில் இன்னும் இருக்கிறது.)

“மூன்று மாதங்களுக்கு முன்பு இந்திய தேர்தல் ஆணையக் குழு ஒன்று கோலாலம்பூருக்கு வந்து வாக்களிப்பு அமைவுமுறை குறித்து மலேசிய தேர்தல் அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்ததாக எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது.”

6) அரசியல் கட்சிகள் தங்களுடைய சொந்த டிவி நிலையத்தை அமைத்து தங்களுடைய கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்கள் குறித்து நிகழ்ச்சிகளை நடத்தலாம். அச்சகங்கள் எவ்விதத் தடையுமின்றி செய்திகள் வெளியிடலாம்.

kula1-710712இந்தியாவுக்கு சென்றிருந்த இக்குழுவினர் இரண்டே நாள்கள்தான் அங்கிருந்தனர். கர்பால் சிங்கின் அகால மரணத்தின் காரணமாக அவர்கள் தங்களுடைய இந்திய வருகையைச் சுறுக்கிக் கொண்டு நாடு திரும்பியதாக குலசேகரன் கூறுகிறார்.

இருப்பினும், தங்களுடைய இரு நாள் வருகையில், தவறு இழைப்பதற்கான வாய்ப்புகள் அறவே இல்லாத இந்தியாவின் மிக அண்மையத் தொழில்நுட்பத்தை தாங்கள் கண்டதோடு ஏராளமான விசயங்களைக் கற்றுக் கொண்டதாகவும் குலா கூறுகிறார்.

இப்பயணத்திற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்த மலேசியாவுக்கான இந்திய ஹைகமிஷனர் திருமூர்த்திக்கும் தமிழ் நாடு தேர்தல் ஆணையத்திற்கும் தங்களுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக குலசேகரன் அவரது அறிக்கையில் கூறியுள்ளார்.

மலேசிய தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும்

மலேசியாவில் இது வரையில் 13 பொதுத் தேர்தல்கள் நடந்திருந்த போதிலும், வாக்குச் சீட்டு மோசடிகள், ஆவி வாக்காளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு ஊடகங்களில் போதிய இடமளிக்க மறுத்தல் போன்ற பல பிரச்சனைகள் தொடர்ந்து இருந்து வருகின்றன.

“இது போன்ற பிரச்சனைகளை எவ்வாறு இந்திய தேர்தல் ஆணையம் கையாண்டுள்ளது என்பது மலேசிய தேர்தல் ஆணையத்திற்கு தெரியும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். அவர்கள் தெரிந்திருக்கவில்லை என்றால், அடுத்து வரும் நாடாளுமன்ற கூட்டங்களின் வழி நான் அவர்களுக்கு நிச்சயமாக தெரிய வைப்பேன்”, என்கிறார் குலா.

மலேசிய தேர்தல் ஆணையமும் மலேசிய அரசாங்கமும் சுயேட்சையான, நேர்மையான பொதுத் தேர்தல்களை நடத்த எந்த அளவிற்கு திடமாக இருக்கின்றன என்பதுதான் முக்கியமான கேள்வி என்றாரவர்.

இன்று வரையில் தேர்தல் ஆணையமும் மலேசிய அரசாங்கமும் எதிரணியினர் முன்மொழிந்துள்ள பரிந்துரைகள் எதனையும் ஏற்றுக்கொள்ளவில்லை, இவற்றில் 21 ஆவது வயதை எட்டிய மலேசியர்கள் இயல்பாகவே வாக்காளர்களாக பதிவு செய்யப்படும் பரிந்துரையும் அடங்கும் என்று அவர் மேலும் கூறினார்.

“மலேசியாவில் ஒரு சுயேட்சையான மற்றும் நேர்மையான பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக தேர்தல் ஆணையம் ஒட்டுமொத்தமாக ஒரு சுயேட்சையான அமைப்பாக ஆக்கப்பட்டு அது நாடாளுமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன்”, என்று குலசேகரன் குறிப்பிடுகிறார்.

 

 

 

 

 

TAGS: