ரஷ்ய – உக்ரேன் நாடுகளுக்கிடையிலான நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கிழக்கு உக்ரைனில் சுமார் 10 நகரங்களில் அரசு கட்டிடங்களை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தமது கட்டுப்பாட்டுக்கள் வைத்துள்ளனர்.
உக்ரேனின் எச்சரிக்கையையும் மீறி அங்கிருந்து அவர்கள் வெளியேற மறுத்து வருகின்றனர்.
அவர்களை தனது செல்வாக்கை பயன்படுத்தி ரஷ்யா வெளியேற்ற வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால் ரஷ்யா உடன்பாட்டுக்கு வரவில்லை.
இந்த நிலையில், ரஷ்யப்படையினர் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான தீவிர இராணுவ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ரஷ்ய துருப்பினர் தமது எல்லைக்கு ஒரு கி.மீ. தொலைவில் வந்து விட்டதாக உக்ரைன் ராணுவ அமைச்சர் மிக்கைலோ கோவல் நேற்று தெரிவித்தார்.
அதே நேரத்தில் அவர்கள் எல்லை தாண்டி வரவில்லை என்றும், அப்படி அவர்கள் அத்துமீறி நுழைந்தால், அவர்களை விரட்டியடிக்க உக்ரைன் படையினர் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே உக்ரைன் பிரதமர் ஆர்செனி, உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமித்து மூன்றாம் உலகப்போரை தொடங்க விரும்புவதாக கூறினார். உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுத்தால், அது ஐரோப்பாவில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்தார்.