எகிப்தில் தடைசெய்யப்பட்டுள்ள முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைவரான முகமது பாதீக்கும் அவ்வியக்கத்தின் ஆதரவாளருகள் கிட்டத்தட்ட எழுநூறு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அந்நாட்டின் நீதிபதி ஒருவர் பரிந்துரைத்துள்ளார்.
சென்ற வருடம் மின்யா என்ற ஊரிl நடந்த கலவரங்கள், பொலிசார் தாக்கப்பட்டது மற்றும் கொல்லப்பட்டது போன்ற குற்றங்களை இவர்கள் மீது நீதிமன்றம் உறுதிசெய்திருந்தது.
இவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு தற்போது எகிப்தின் மூத்த மத அதிகாரியான தலைமை முஃப்தியின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அவர் எடுக்கின்ற முடிவு ஜூன் மாத பிற்பகுதியில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதேபோன்ற வேறொரு வழக்கில் குற்றம் உறுதிசெய்யப்பட்டிருந்த சுமார் நாற்பது முஸ்லிம் சகோதரத்துவ ஆதரவாளர்களின் மரண தண்டனைத் தீர்ப்புக்களை இதே நீதிமன்றம் சென்ற மாதம் உறுதிசெய்திருந்தது.
ஆனால் சுமார் ஐநூறு பேருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனைகளை அது ஆயுட் தண்டனைகளாக குறைத்திருந்தது. -BBC