“ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தாலும் கிடைக்கும்’ என அமெரிக்க அதிபர் ஒபாமா கிண்டலாகக் கூறியுள்ளார்.
அமெரிக்காவில், செய்தியாளர்கள் மற்றும் பிரபலங்கள் முன்னிலையில், பிறரையும், தன்னையும் கிண்டல் செய்து அந்நாட்டு அதிபர் உரையாற்றும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறும்.
அந்த வகையில், 2014-ஆம் ஆண்டுக்கான இந்த நிகழ்ச்சி வாஷிங்டனில் சனிக்கிழமை நடைபெற்றது.
அப்போது பேசிய அதிபர் ஒபாமா, “”மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைப் பொருத்தவரை 2008-ஆம் ஆண்டு “என்னால் நிச்சயம் முடியும்’ என்பது என்னுடைய கோஷமாக இருந்தது. ஆனால் 2013-ஆம் ஆண்டு அது “கன்ட்ரோல்+ஆல்ட்+டெலீட்’ (கணினியை அணைப்பதற்குப் பயன்படுத்தும் கட்டளைச் சொல்) என்றாகிவிட்டது.
ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. உண்மையைச் சொல்லப்போனால், தற்போதெல்லாம் நோபல் பரிசு யாருக்கு வேண்டுமானாலும் வழங்கப்படலாம்” என்று கூறினார்.
உக்ரைன் விவகாரத்தில் தலையிடுவதாக ரஷியாவுக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், ஒபாமா இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.