மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை அமைக்க வேண்டுமென போக்கோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பு ஆயுதமேந்தி போராடி வருகிறது.
போர்னோ மாவட்டத்தில் உள்ள மைடுகுரியில் இருந்து 130 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சிபோக் பகுதியில் உள்ள பெண்கள் விடுதிக்கு சென்று தீவிரவாதிகள் காவலர்களுடன் கடுமையான துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர்.
விடுதிக்குள் தூங்கிக் கொண்டிருந்த சுமார் 200 இளம் வயது மாணவிகளை பலவந்தமாக கடத்திச் சென்றனர்.
மேற்கத்திய நாடுகளின் கல்வி முறையை தீவிரமாக எதிர்த்து வரும் போக்கோ ஹரம் அமைப்பினர், சமீப காலமாக பாடசாலைகள் மற்றும் மாணவர்களை குறி வைத்து தாக்கி வருகின்றனர்.
கடந்த மாதம் ஒரு பாடசசாலை விடுதிக்குள் புகுந்து மாணவர்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்றனர். மாணவிகளை கடத்தப் போவதாக சில தினங்களுக்கு முன்னர் வீடியோ மூலம் மிரட்டல் விடுத்திருந்தனர். அரசு போதுமான பாதுகாப்பு அளித்திருந்தால் இந்த கடத்தல் சம்பவத்தை தவிர்த்திருக்கலாம் என்று சிபோக் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
கடத்திச் செல்லப்பட்ட வாகனம் ஒன்று பழுதானதால், அதிலிருந்த மாணவிகளையும் மற்றொரு வாகனத்தில் ஏற்றியபோது, இருளில் தீவிரவாதிகளின் கண்களில் படாமல் புதர் மறைவில் பதுங்கியபடி சிபோக் நகரை வந்தடைந்த சில மாணவிகள் வாகனத்தின் உள்ளே தீவிரவாதிகள் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, கடத்திச் செல்லப்பட்ட தங்கள் மகள்களின் கதி என்னவானது என..? பல பெற்றோர்கள் கண்ணீருடன் கதறிக் கொண்டிருந்தனர். தற்போது அந்த 200 மாணவிகளையும் பாலியல் அடிமைகளிடம் விற்கப்போவதாக தீவிரவாதிகள் மிரட்டியுளளது குறிப்பிடத்தக்கது.