பாக்.: மதநிந்தனை குற்றச்சாட்டுக்கு ஆளானவருக்காக வாதடிய வழக்குரைஞர் சுட்டுக் கொலை

rashid_rehmanபாகிஸ்தானில் மத நிந்தனைக் குற்ற்ச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடிவந்த முன்னணி வழக்கறிஞர் படுகொலை செய்யப்பட்டிருப்பதை அந்நாட்டின் மனித உரிமைக் குழுக்கள் கண்டித்துள்ளன.

ரஷீத் ரஹ்மான் என்ற அந்த சட்டத்தரணி புதன்கிழமை இரவு முல்தான் நகரில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தபோது துப்பாக்கிதாரிகளால் சுடப்பட்டிருந்தார்.

முகமது நபியை இழிவுபடுத்திவிட்டதாக கடும்போக்கு இஸ்லாமியவாதிகளால் சென்ற வருடம் மார்ச் மாதம் குற்றம்சாட்டப்பட்டிருந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் சார்பாக ரஷீத் ரஹ்மான் நீதிமன்றத்தில் வாதாடிவந்தார்.

கொலை மிரட்டல்கள் வந்தும் இந்த வழக்கை ரஹ்மான் எடுத்துக்கொண்டிருந்தார் என செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

பாகிஸ்தானில் தீவிரவாத சக்திகளை எதிர்த்து அச்சமின்றி குரல்கொடுத்த தைரியம் மிக்க மனித உரிமை சட்டத்தரணி ரஹ்மான் என்று சக வழக்குரைஞர்கள் அவரை வர்ணித்துள்ளனர். -BBC