பாகிஸ்தானில் போலியோ தலைத்தூக்குவதன் காரணங்கள்

polioபத்து ஆண்டுகளுக்கு முன் போலியோ நோயை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்து விடக்கூடிய நிலையிலிருந்தது பாகிஸ்தான். ஆனால் போலியோ தடுப்பு என்பது முஸ்லிம்களை மலடாக்கும் சதிவேலை என்று பரப்பப்பட்ட அச்சம், தாலிபான்களின் எழுச்சி, போலியோ தடுப்பு ஊழியர்கள் சுடப்பட்ட சம்பவங்கள் போன்றவற்றின் காரணமாக தற்போது உலகிலே போலியோ வேகமாக அதிகரித்துவரும் நாடாக பாகிஸ்தான் உருமாறியுள்ளது.

உள்நாட்டிலேயே போலியோ பரவுகின்ற ஆபத்துள்ள உலகின் மூன்றே நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று.

இந்நாட்டில் போலியோ மீண்டும் பெரிதாகத் தலைதூக்கும் ஆபத்துள்ளது என ஐநாவின் உலக சுகாதாரக் கழகம் அண்மையில் எச்சரித்திருந்தது.

இந்த நிலைக்கு ஒரு பங்கில் காரணம் போலியோ பரவக்கூடிய ஆபத்து அதிகமுள்ள சில இடங்களில் பிள்ளைகளுக்கு முறையாக தடுப்பு மருந்து கொடுக்க முடியாத சூழல் பாகிஸ்தானுக்கு இருப்பதுதான்.

ஏனென்றால் அவ்விடங்களில் போலியோ தடுப்பு முகாம்களை இலக்குவைத்து அடுத்தடுத்து தாக்குதல்கள் நடந்துவந்துள்ளன.

போலியோ தடுப்பு மருந்து பற்றி பரப்பப்படுகின்ற கதைகளும், அது ஏற்படுத்தும் அச்சமும இந்த தாக்குதல்களுக்கு காரணம்.

அதிகரிக்கும் போலியோ

பாகிஸ்தானில் தாக்குதலில் கொல்லப்படுகின்ற போலியோ தடுப்பு மருந்து ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற அதேநேரத்தில், அந்நாட்டில் போலியோவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையும் கூடிவருகிறது.

கடந்த ஜனவரி முதல், நான்கு மாத காலத்தில் பாகிஸ்தானில் போலியோ வந்தவர்களாக 59 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள்.

இவர்களில் 42 பேர் பழங்குடியினப் பகுதியான வடக்கு வாசிரிஸ்தானில் இருப்பவர்கள்.

பிரச்சினையின் அடிநாதமான இடம் வாசிரிஸ்தானே என கைபர் பக்தூன்குவா மாகாண போலியோ கண்காணிப்பு பிரிவின் தலைவர் டாக்டர் இம்தியாஸ் அலி ஷா கூறுகிறார்.

கைபர் பக்தூன்குவாவிலும் கராச்சியிலும்கூட போலியோ தலைதூக்குவதென்பது வாசிரிஸ்தானில் நிலவும் சூழலின் காரணமாகத்தான் என்றும் வாசிரிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து குழந்தைகளுக்கு கொடுக்கவிடாமல் சில குழுக்கள் தடுக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

2005 ஆண்டு மொத்தத்திலுமாகவே பாகிஸ்தானில் போலியோ புதிதாக 28 பேருக்கு மட்டுமே வந்திருந்தது. அரசியல் பிரச்சினை இருந்திருக்கவில்லை என்றால் 3 மாதங்களில் போலியோவை பாகிஸ்தானிலிருந்து ஒழித்துவிருக்கவே முடியும் என்று இம்தியாஸ் கூறுகிறார்.

“போலியோ ஒழிப்பு – சதிவேலை”

போலியோ தடுப்பு முகாம் ஊழியர்களை இலக்குவைத்து பல தாக்குதல்கள் நடந்துள்ளன.போலியோ தடுப்பு முகாம் ஊழியர்களை இலக்குவைத்து பல தாக்குதல்கள் நடந்துள்ளன.

 

அந்த வருடம் ஸ்வாத் பகுதியைச் சேர்ந்த தீவிரவாதக் குழுக்கள் போலியோ ஒழிப்பு முயற்சிகளை எதிர்க்கத் தீர்மானித்தன.

முஸ்லிம் குழந்தைகளை மலடாக்க வேண்டும் என்ற ரகசிய உள்நோக்கத்துடன் அமெரிக்கா முன்னெடுக்கிற சதி வேலைதான் போலியோ ஒழிப்பு நடவடிக்கை என அவை குற்றம்சாட்டின.

போலியோ மருந்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டும் சில நேரம் கொல்லப்பட்டும் இருந்தனர்.

அல்கைதா தலைவர் ஒசாமா பின் லாடனை அமெரிக்கா தேடிப் பிடிக்க உதவுவதற்காக பாகிஸ்தானி மருத்துவர் ஒருவர் போலியாக போலியோ ஒழிப்பு முகாம் நடத்துகிறார் என 2011ல் ஒரு குற்றச்சாட்டும் எழுந்தது.

வாசிரிஸ்தானில் போலியோ தடுப்பு முகாம் நடத்தப்படக்கூடாது என 2012ல் அப்பிராந்தியத்தைக் கட்டுப்படுத்தும் பழங்குடியினக் குழுக்கள் தீர்மானித்ததற்கும் தற்போது அங்கே போலியோ அதிகரித்து வருவதற்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது என போலியோ கண்காணிப்பு பிரிவின் தலைவர் இம்ஸ்தியாஸ் அலி ஷா தெரிவித்துள்ளார். -BBC