ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 40 பேர் பலி

libya_african_immigrants_002லிபியா கடற்பகுதி வழியாக பயணித்துக் கொண்டிருந்த படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 57 பேர் காப்பாற்றப்பட்டுள்னர்.

லிபியாவின் தலைநகர் திரிபோலியிலிருந்து 37 மைல் கிழக்கே உள்ள ரமி கால் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகத் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

லிபியாவின் பாதுகாப்பற்ற கடல் எல்லைகளும், மத்தியதரைக் கடலைத் தாண்டி இத்தாலி, மால்டா போன்ற நாடுகளை எளிதில் அணுகும் வண்ணம் அமைந்துள்ள அந்நாட்டின் நிலப்பரப்பும் ஐரோப்பாவை அடைய முயற்சி செய்யும் வடக்கு ஆப்பிரிக்க மக்களுக்கு லிபியாவை பொது வழித்தடமாக மாற்றியுள்ளது.

இந்தப் பயணத்திற்காக அவர்கள் ஒவ்வொருவரும் தலா 1000 டாலருக்கு மேல் சட்ட விரோத குழுக்களிடம் பணம் செலுத்துவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயுதாரிகளின் கட்டுப்பாட்டிலுள்ள லிபியா தனது நாட்டின் பாதுகாப்புத்துறையை வலுப்படுத்த உலக நாடுகளின் உதவியை எதிர்நோக்கியுள்ளது.

இதனைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சட்ட விரோத குழுக்கள் ஐரோப்பாவிற்கு குடியேற விரும்பும் மக்களை முறையற்ற வழியில் அனுப்ப இந்தத் தடத்தைப் பயன்படுத்துகின்றன.

கடந்த மார்ச் மாதம் இவ்வாறு மத்தியதரைக் கடல் பகுதியில் வந்து ஆபத்தில் சிக்கிய 4000 அகதிகளை நான்கு நாட்களில் சிசிலியின் தெற்குப் பகுதியில் இத்தாலிய அரசு காப்பாற்றியுள்ளது இங்கு குறிப்பிடப்படுகின்றது.