யுக்ரெய்னின் கிழக்கிலே சில பகுதிகளில் ரஷ்ய ஆதரவுக் குழுக்கள் நடத்தியுள்ள உத்தியோகபூர்வமற்ற கருத்து வாக்கெடுப்பினை ‘போலித்தனம்’ என்று கூறி யுக்ரெய்ன் இடைக்கால அதிபர் ஒலெக்ஸாந்தர் துர்ச்சினொவ் நிராகரித்துள்ளார்.
இந்த வாக்கெடுப்பு சட்டப்படி செல்லாது என்று அவர் கூறினார்.
ஆனால் ரஷ்யாவோ, இந்த கருத்து வாக்கெடுப்பின் முடிவு மதிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.
ஆயுததாரிகளுக்கும், கியெவ்வில் உள்ள யுக்ரெய்னிய அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் ரஷ்யா மீண்டும் தெரிவித்துள்ளது.
சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக 75 சதவீதமான வாக்காளர்கள் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என இந்த இந்த கருத்து வாக்கெடுப்பை ஏற்பாடு செய்து நடத்தியவர்கள் கூறுகின்றனர்.
குழப்பகரமானது, முறைகேடாக நடத்தப்பட்டது என்றெல்லாம் வர்ணிக்கப்படுகின்ற இந்த கருத்து வாக்கெடுப்பில் பெரும்பான்மையான வாக்காளர்கள் பங்கேற்றார்கள் என்பதற்கு வாய்ப்பு இல்லை என்று பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.
போதிய வாக்குச்சாவடிகளோ, புதிதாகத் தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலோ, வாக்காளர்களின் அடையாளம் உறுதிசெய்வதற்கான ஏற்பாடோ இத்தேர்தலில் இல்லை என்று அவர் தெரிவிக்கிறார். -BBC