நைஜீரியா: ‘கடத்தப்பட்ட மாணவிகளைக் காட்டும்’ புதிய வீடியோ

boko_haram_abducted_girlsநைஜீரியாவில் கடத்தப்பட்ட நூற்றுக்கும் அதிகமான பெண்பிள்ளைகளைக்காட்டும் புதிய வீடியோ ஒன்றை அந்நாட்டின் இஸ்லாமியவாத ஆயுதக்குழுவான போக்கோ ஹராம் வெளியிட்டுள்ளது.

நான்கு வாரங்களுக்கு முன் கடத்தப்பட்டிருந்த பள்ளிக்கூட மாணவிகள் இவர்கள் என்று நம்பப்படுகிறது.

பள்ளிக்கூடத்திலிருந்து காணாமல்போன பெண் பிள்ளைகள் இவர்கள் என்றும், தடுத்துவைக்கப்பட்டுள்ள போக்கோ ஹராம் உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டால்தான் இப்பிள்ளைகள் விடுவிக்கப்படுவார்கள் என்று வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் போக்கோ ஹராம் தலைவரான அபூபக்கர் ஷெகாவு நிபந்தனை விதித்துள்ளார்.

தடுத்துவைக்கப்பட்டதன் பின்னர் இந்த மாணவிகள் இஸ்லாத்துக்கு மாறிவிட்டனர் என்று அவர் கூறினார். இப்பெண்கள் தலைத்துண்டும் மேலங்கியும் அணிந்து இந்த வீடியோவில் காணப்பட்டிருந்தனர்.

நாட்டின் வடகிழக்கில் சிபொக் என்ற ஊரிலுள்ள தங்கிப் படிக்கும் பள்ளி ஒன்றிலிருந்து இவர்கள் கொண்டுசெல்லப்பட்டிருந்தனர்.

போக்கோ ஹராமை எதிர்ப்பதற்கான வழிகள் குறித்து ஆராய்வதற்காக, வரும் சனிக்கிழமை கூட்டம் ஒன்றை நடத்த பிரஞ்சு அதிபர் பிரான்சுவா ஒல்லோந்த் அழைப்பு விடுத்துள்ளார். -BBC