கடத்தப்பட்ட மாணவிகளின் நகரம் செல்லும் நைஜீரிய ஜனாதிபதி

nigeria_president_001போகோஹராம் தீவிரவாத இயக்கத்தால் பள்ளி மாணவிகள் கடத்தி வைக்கப்பட்ட நகரத்திற்கு நைஜீரிய ஜனாதிபதி இன்று பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

நைஜீரியாவில் செயல்பட்டுவரும் போகோஹராம் இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் கடந்த மாதம் 14ஆம் தேதி போர்னோ மாநிலத்தின் சிபோக் என்ற இடத்தில் உள்ள உறைவிடப் பள்ளியிலிருந்து 276 மாணவிகளைக் கடத்திச் சென்றுள்ளது.

இவர்களில் 53 மாணவிகள் தப்பிவிட்ட நிலையில் மீதமுள்ள மாணவிகள் இன்னமும் அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றனர்.

இந்நிலையில் கடத்தப்பட்ட மாணவிகளை தாங்கள் விற்கபோவதாக அந்த தீவிரவாத அமைப்பு தொடர்ந்து அச்சுருத்தியுள்ளது.

மாணவிகளை மீட்பதற்காக அமெரிக்க தனது ஆளில்லா மற்றும் கண்காணிப்பு விமானங்களை பயன்படுத்தி வருகின்றது.

இந்த கடத்தல் விவகாரத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றதால் தற்போது, மாணவிகளை மீட்கும் பணியில் உலக நாடுகளும் பங்கேற்றுள்ளன.

இதனைதொடர்ந்து இன்று நைஜீரிய ஜனாதிபதி குட்லக் ஜோனாதன் தனது பாரிஸ் பயணத்திற்கு முன்பு நைஜீரியாவின் மாணவிகள் கடத்தப்பட்ட இடமான சிபோக் நகரத்திற்கு செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் போகோஹராம் இயக்கத்தினரால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபடவே, பாரிசில் நடைபெறவுள்ள பிராந்திய பாதுகாப்பு உச்சி மாநாட்டிற்கு நைஜீரிய ஜனாதிபதி செல்வதாக மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.