சிரியா நாட்டில் விமானப்படை முகாம் மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் விமானப்படையின் தலைமைத் தளபதி கொல்லப்பட்டார்.
இது குறித்து சிரியா விமானப்படை உயர் அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
எம்லேய்ஹா என்ற நகரின் அருகே அமைந்துள்ள விமானப்படை முகாம் மீது நுஸ்ரா முன்னணி என்ற அல்-காய்தா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் சனிக்கிழமை திடீரென தாக்குதல் நடத்தினர். நுஸ்ரா முன்னணியினரும் மேலும் சில தீவிரவாத இயக்கத்தினரும் இணைந்து ராக்கெட் குண்டுகளை வீசினர்.
இதில் படுகாயமடைந்த விமானப்படை தலைமைத் தளபதி ஹுசைன் இஷாக் உயிரிழந்தார் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். இந்தத் தகவலை அந்நாட்டில் செயல்பட்டுவரும் பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமைகள் கண்காணிப்பு தொண்டு நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது.
சிரியா அதிபர் பஷார் அஸாதுக்கு எதிராக புரட்சிப்படையினரும், தீவிரவாத அமைப்புகளும் கடந்த ஓராண்டாக நடத்திவரும் இந்தத் தாக்குதலில் ஹுசைன் இஷாக் உயிரிழந்தது அரசு தரப்புக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.