காவல்நிலையத்துக்குள் நுழைந்து பெரியவரை சுட்டுக் கொன்ற பையன்

pakபாகிஸ்தானில் மதநிந்தனை குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருந்த சிறுபான்மை மதப் பிரிவு ஒன்றைச் சேர்ந்த அறுபத்தைந்து வயது பெரியவர் ஒருவரை பதின்ம வயது பையன் ஒருவர் காவல்நிலையத்துக்குள் நுழைந்து சுட்டுக் கொன்றுள்ளார்.

பஞ்சாப் மாகாணத்திலுள்ள ஒரு கிராமத்தில் கலில் அகமது என்ற அந்த முதியவர் வெள்ளிக்கிழமை இரவு காவல்நிலையத்தில் அறை ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது அப்பையனால் சுடப்பட்டுள்ளார்.

சுட்டவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அகமதி பிரிவைச் சேர்ந்த கலீல் அகமது பாகிஸ்தானின் மதநிந்தனைச் சட்டத்தின் கீழ் நான்கு நாட்களுக்கு முன் கைதுசெய்யப்பட்டிருந்தார். அவரின் ஜாமீன் மனு வட்டார நீதிமன்றம் ஒன்றில் நிலுவையில் இருந்துவருகிறது.

அகமதி சமூகத்தார் முஸ்லிம்கள் இல்லை என 1974ஆம் ஆண்டே பாகிஸ்தானில் அறிவிக்கப்பட்டிருந்தனர்.

பாகிஸ்தானில் மத நிந்தனைக் குற்றச்சாட்டுகளின் அண்மைக் காலங்களில் அதிகரித்துவந்துள்ளது என்றும், அந்நாட்டின் கடுமையான மதநிந்தனைச் சட்டங்களை தவறாகப் பயன்படுத்தி தனிப்பட்ட பகையைத் தீர்த்துக்கொள்வது அடிக்கடி நடந்துவருகிறது என்றும் செய்தியாளர்கள் கூறுகின்றனர். -BBC