கிறிஸ்தவரை மணந்த இஸ்லாமிய பெண்ணுக்கு சுடானில் மரணதண்டனை

nooseகிறிஸ்தவர் ஒருவரை மணந்த 27 வயதான ஒரு சுடானிய பெண்ணுக்கு மதத்தை கைவிட்ட குற்றச்சாட்டின் பேரில் தூக்குத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அவருடைய திருமணம் செல்லாது என்று கூறி, திருமணத்துக்கு புறம்பான உறவு வைத்திருந்ததாகக் கூறி அவருக்கு 100 கசையடிகளுக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

8 மாத கர்ப்பிணியான டாக்டர் மரியம் யாஹ்யா இப்ராஹிம் அவர்கள் கிறிஸ்தவராகவே வளர்ந்தவர் அம்னஸ்டி இண்டர்நாஷனல் கூறுகிறது.

ஆனால், அவருடைய குழந்தைப் பருவத்தில் இருந்தே அவரோடு இல்லாது இருந்த அவரது தந்தை, ஒரு முஸ்லிம் என்பதால், மரியத்தை ஒரு இஸ்லாமியராக அதிகாரிகள் கருதுகிறார்கள்.

அங்கு முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆண்களை திருமணம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. அப்படியான திருமணங்கள் செல்லுபடியாகாதவையாக கருதப்படும்.

”நீ திரும்பி இஸ்லாத்துக்கு வருவதற்கு உனக்கு மூன்று நாள் அவகாசம் தந்தோம், ஆனால், நீ மாறவில்லை, ஆகவே உன்னை சாகும்வரை தூக்கிலிட உத்தரவிடுகிறோம்” என்று நீதிபதி அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளார்.

அந்தக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு இருக்கும் ”தான் விரும்பும் மதத்தை தழுவிக்கொள்ளும் உரிமையை” மதிக்குமாறு மனித உரிமை அமைப்புக்களும், மேலை நாட்டுத் தூதரகங்களும் சுடானிய அரசாங்கத்தை கோரியுள்ளன.

அந்தப் பெண், குழந்தையைப் பிரசவித்து இருவருடங்கள் ஆகும் வரை, அந்தத் தண்டனை நிறைவேற்றப்படாது என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையில் ஆட்சி நடத்தும் சுடானில், பெரும்பான்மையானோர் இஸ்லாமியராவர். -BBC