நைஜீரியாவில் தீவிரவாதிகள் நிகழ்த்திய இரட்டை குண்டுவெடிப்பில் 118 பேர் பலியாகினர்.
இதுகுறித்து அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், “ஜோஸ் நகரில் உள்ள சந்தைப்பகுதியில், நிறுத்தப்பட்டிருந்த வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட லாரி ஒன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் வெடித்துச் சிதறியது. இந்தத் தாக்குதல் நடைபெற்ற 20 நிமிடங்கள் கழித்து, வெடிகுண்டு நிரப்பப்பட்ட மினி பேருந்து ஒன்று வெடித்து சிதறியது.
இந்த இரட்டை குண்டுவெடிப்பில் சிக்கி, அப்பகுதிகளில் நின்றுகொண்டிருந்த 116 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும், 45 பேர் படுகாயமடைந்தனர். தாக்குதல்களில் பலியானவர்களில் பெண்களே அதிகம்.
இப்பகுதியில் இதற்கு முன்பு நிகழ்ந்த குண்டுவெடிப்புகளுக்கு போகா ஹராம் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. எனவே இந்தத் தாக்குதல்களுக்கும் அந்த அமைப்பே காரணமாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.