சீனாவில் தீவிரவாதிகள் வியாழக்கிழமை நிகழ்த்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில், பொதுமக்கள் 31 பேர் பலியாகினர். மேலும் 90 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சீன அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹூவா வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கும் சின்ஜியாங் மாகாணத்தின் தலைநகர் உரும்கியில் உள்ள சந்தையில் வியாழக்கிழமை காலை 7.50 மணியளவில் மக்கள் அதிக அளவில் கூடியிருந்தனர். இந்நிலையில், சந்தைப் பகுதியில் நுழைந்த 2 வாகனங்கள், வட திசையில் இருந்து தென் திசைப்பகுதி நோக்கி சென்றன.
அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக அந்த வாகனங்களில் இருந்த நபர்கள், சந்தையில் கூடியிருந்த பொதுமக்கள் மீது வெடிகுண்டுகளை வீசினர்.
அந்த வெடிகுண்டுகள் கிழே விழுந்து வெடித்துச் சிதறின. அப்போது, அந்த 2 வாகனங்களில் ஒரு வாகனம் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த தாக்குதல்களில் 31 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும் 90 பேர் படுகாயமடைந்தனர். குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதியே புகைமயமாகவும், தீப்பிழம்புகளாகவும் காட்சியளித்தது.
சந்தையின் வெளிப்புற பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் உடனடியாக விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
குண்டுவெடிப்பை அடுத்து, அந்தப் பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்புகளுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இருப்பினும், சின்சியாங் மாகாணத்தில் அண்மைக்காலமாக பொது மக்களை கத்தியால் குத்துதல் உள்ளிட்ட தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் அல்காய்தாவுடன் தொடர்புடைய கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிக் என்னும் தீவிரவாத அமைப்பே இந்த குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியிருக்கும் என சீன அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
சீன அதிபர் எச்சரிக்கை: இதனிடையே, குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு சீன அதிபர் ஜீ ஜின்பிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “குண்டுவெடிப்புகளுக்கு காரணமான தீவிரவாதிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் வாய்ப்புள்ள இடங்களில் உள்ளூர் போலீஸார் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
சின்ஜியாங் மாகாணத்தில் இதுவரை நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில், இதுவே மிகப்பெரியதாக கருதப்படுகிறது. இதனையடுத்து குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையை மேற்பார்வையிடுவதற்காக உரும்கிக்கு சீன பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குவோ விரைந்துள்ளார்.
இந்தியா கண்டனம்
சீனாவில் தீவிரவாதிகள் வியாழக்கிழமை நிகழ்த்திய குண்டுவெடிப்புக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கையில், “தீவிரவாதத்தை அதன் அனைத்து விதங்களிலும் இந்தியா எதிர்க்கிறது. குண்டுவெடிப்பில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது.
இலங்கை தமிழனை அழிக்க கொத்து குண்டு கொடுத்து உதவிய சீனாவுக்கு பதிலடி ஆரம்பம்!