ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வியாழக்கிழமை நடத்திய தாக்குதலில் உக்ரைன் ராணுவ வீரர்கள் 14 பேர் கொல்லப்பட்டனர்.
உக்ரைனில் வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நடத்தப்பட்டிருக்கும் இந்தத் தாக்குதல் சம்பவம், அந்நாட்டு ராணுவத்தினருக்கு கருப்பு தினமாக அமைந்துள்ளது.
ரஷிய நாட்டு எல்லைக்கு அருகே உள்ள கிழக்கு தொழிற்சாலைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உக்ரைன் ராணுவ வீரர்கள் மீது ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வெடிகுண்டுகளை வீசி வியாழக்கிழமை தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் உக்ரைன் ராணுவ வீரர்கள் 14 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உக்ரைன் பிரதமர் அர்செனி யெட்சனுக், “உக்ரைனில் பதற்றத்தை அதிகரிப்பதற்காகவே ரஷியா இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள வாக்குப்பதிவை சீர்குலைக்க இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. அவசரக் கூட்டத்தைக் கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.