152 இந்திய மீனவர்கள் விடுவிப்பு: பாகிஸ்தான் நல்லெண்ண நடவடிக்கை

புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ள நிலையில் அவரது பதவியேற்பு நாளான திங்கள்கிழமை பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 152 இந்திய மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் அந்நாட்டு அரசு விடுவிக்க முடிவு செய்துள்ளது.

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு அந்நாடு பதில் நட்புறவு பாராட்டும்வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

இதுகுறித்து குஜராத் மாநில மீன்வளத்துறை தலைமை ஆணையர் பி.எல்.தர்பார் சனிக்கிழமை கூறியதாவது: “இந்தியாவைச் சேர்ந்த 152 மீனவர்களை (பெரும்பாலானோர் குஜராத்தை சேர்ந்தவர்கள்) பாகிஸ்தான் அரசு திங்கள்கிழமை (மே 26) விடுவிக்க இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து தகவல் கிடைத்தது. இதையடுத்து மீனவர்களை வரவேற்பதற்காக மாநில மீன்வளத்துறை அதிகாரிகள் குழுவை பாகிஸ்தான்-இந்திய எல்லை அமைந்துள்ள வாகா பகுதிக்கு அனுப்பியுள்ளோம். அங்கிருந்து குஜராத்திலுள்ள கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள வெராவல் நகருக்கு அவர்கள் அனைவரும் அழைத்து வரப்படுவார்கள். பின்னர் அங்கிருந்து அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்’ என்றார் தர்பார்.

இதனிடையே, பாகிஸ்தான் விடுவிக்கவுள்ள மீனவர்கள் குஜராத் மாநிலம், டாமண்- டையூ, தாத்ரா- நாகர் ஹாவேலி யூனியன் பிரதேசங்கள் மற்றும் நாட்டின் பல்வேறு நகரங்களைச் சேர்ந்தவர்கள் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.