உக்ரைனில் அதிபர் தேர்தல்: மந்தமான வாக்குப்பதிவு

Ethnolingusitic_map_of_ukraine

உக்ரைனில் கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல்களுக்கு இடையே அதிபர் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. எனினும், ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் கிழக்குப் பகுதியில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது.

ஐரோப்பிய யூனியனுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் அப்போதைய உக்ரைன் அதிபர் விக்டர் யானுகோவிச் கையெழுத்திட மறுத்ததைத் தொடர்ந்து அவர் பதவி விலகக் கோரி கடந்த பிப்ரவரி மாதம் தீவிர போராட்டம் நடைபெற்றது. அப்போது தலைநகர் கீவில் கலவரம் வெடித்ததில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில், 99 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.

அதைத் தொடர்ந்து உக்ரைனில் மே 25ஆம் தேதி அதிபர் தேர்தல் நடத்தவும், அரசியலமைப்பில் சீர்திருத்தத்தை கொண்டுவரவும் விக்டர் யானுகோவிச் சம்மதித்தார்.

எனினும், எதிர்ப்பாளர்களின் நெருக்கடி முற்றியதால் நாட்டை விட்டு அவர் வெளியேறினார்.

அதையடுத்து உக்ரைனில் அதிபர் அலெக்சாண்டர் துர்ச்சினோவ் தலைமையிலான இடைக்கால அரசின் ஏற்பாட்டின்படி, திட்டமிட்டபடி அதிபர் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தலைநகர் கீவில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். அங்கு அதிக அளவு வாக்குகள் பதிவான நிலையிலும், கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கத்தின் கீழ் உள்ள உக்ரைனின் கிழக்குப் பகுதிகளில் பெரும்பாலான வாக்குச்சாவடிகள் மூடியே இருந்தன.

அந்தப் பிராந்தியத்தில் உள்ள டொனெட்ஸ்க் நகரைச் சேர்ந்த எலிசபெத்தா என்ற பெண் கூறுகையில், “”உக்ரைன் தற்போது வேறு நாடு. எனவே, இந்த தேர்தலில் நான் ஏன் பங்கேற்க வேண்டும்? இந்த தேர்தல் முடிவு எங்களுக்கு ஒரு பொருட்டல்ல என்பதால் அதைப் பற்றி நாங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.

உக்ரைன் பிரதமர் ஆர்செனிக் யாட்சென்யுக் வாக்காளர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், “”கிழக்கு-மேற்கு நாடுகளுக்கு இடையே பனிப்போர் காலத்தில் விட்டுப்போன உறவுகளை மேம்படுத்த உக்ரைனை சார்ந்துள்ள மக்கள் திரளாக வாக்களிக்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்திருந்தார்.

போலந்து எல்லையில் உள்ள லிவிவ் அருகே அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்து விட்டு வந்த வர்த்தகப் பிரமுகர் ஒருவர் கூறுகையில், “”இந்த தேர்தல் மூலம் உக்ரைனில் அமைதி திரும்பும் என்று நம்புகிறேன்” என்றார்.

பொது வாக்கெடுப்பு மூலம் சுதந்திரக் குடியரசாக அறிவித்துக்கொண்ட டொனெட்ஸ்க் நகரில் அமைக்கப்பட்ட 2,430 வாக்குச்சாவடிகளில் 426 வாக்குச்சாவடிகள் மட்டுமே திறந்திருந்தன.

“கிழக்குப் பகுதியின் முக்கிய நகரான ஸ்லாவ்யான்ஸ்க்கில், மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த 2 புகைப்படக்காரர்கள் தாக்கப்பட்டனர். மேலும், உக்ரைன் பிரிவினைவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் ரஷிய மொழி பெயர்ப்பாளர் ஒருவர் காயமடைந்தார்’ என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபர் தேர்தலையொட்டி 82,000 போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். 17,500 தன்னார்வலர்கள், 1,200 சர்வதேசப் பார்வையாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த அதிபர் தேர்தலில் கோடீஸ்வரரான பெட்ரோ பொரோஸ்ஷென்கோ மற்றும் முன்னாள் பிரதமர் யுலி தைமோஷென்கோ ஆகியோர் முன்னணி வேட்பாளர்களாக கருதப்படுகின்றனர்.