ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத் தேர்தல் முடிவில் யூனியனுக்கு எதிரான கட்சிகள் வலுவான நிலையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய யூனியனில் மொத்தம் உள்ள 751 இடங்களில், யூனியனுக்கு எதிரான கட்சிகள் 140 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிகிறது. இது, ஐரோப்பிய நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய யூனியனில் 28 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. 4 நாள்களாக நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் தேர்தல் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது.
ஐரோப்பிய யூனியனில் ஃபிரான்ஸýக்கு உள்ள 74 இடங்களில், யூனியனுக்கு எதிரான வலதுசாரி தேசிய முன்னணி (25 சதவீத வாக்குகள்) 24 இடங்களில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற நிலைமை பிரிட்டனிலும் நிலவியது. அங்கு, யூனியனுக்கு எதிரான பிரிட்டன் சுதந்திரக் கட்சி, 27.5 சதவீத வாக்குகள் பெற்று, மொத்தமுள்ள 73 இடங்களில் 23இல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
“பிரிட்டனின் 100 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இது அசாதாரண தேர்தல் முடிவு’ என்று சுதந்திரக் கட்சியின் தலைவர் நைஜல் ஃபெரேஜ் தெரிவித்தார்.
பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனின் கட்சி 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது. இருப்பினும், அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்தலில் தங்கள் கட்சி வெற்றி பெறும் என்று கேமரூன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதேபோல், ஹங்கேரி மற்றும் கிரேக்கத்தில் உள்ள வலதுசாரிக் கட்சிகள் வலுவான நிலையை எட்டியுள்ளன.
யூனியனுக்கு எதிரான கட்சிகள் சில நாடுகளில் முன்னணியில் உள்ளபோதும், ஐரோப்பிய யூனியனில் உள்ள மொத்த இடங்களில் ஐரோப்பிய மக்கள் கட்சி 212 இடங்களிலும், சோஷலிசக் கட்சி 187 இடங்களிலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.