1.8 டன் வெடிமருந்துகளுடன் 5 தீவிரவாதிகள் கைது

xinjiangசீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் 1.8 டன் வெடிமருந்து பொருள்களுடன் 5 தீவிரவாதிகளை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து சீன காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:

சீனாவில் அபிலிஸ் தாவூத் என்பவர் தலைமையிலான தீவிரவாதக் குழு, உரும்கி என்ற இடத்தில் இம்மாதம் 22ஆம் தேதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் உள்பட 43 பேர் உயிரிழந்தனர்.

கோதன் என்ற இடத்தில் மற்றொரு தாக்குதலை நடத்துவதற்காக இரவு நேரங்களில் வெடிகுண்டு தயாரிக்கும் பணிகளில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அந்தப் பகுதியில் சோதனை நடத்தியபோது, 5 தீவிரவாதிகள் பிடிபட்டனர். சீனாவில் தீவிரவாதக் குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் தொடர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தீவிரவாதக் குழுக்கள், தீவிரவாத பயிற்சி முகாம்கள், வெடிமருந்து தயாரிக்கும் இடங்கள் ஆகியவற்றைக் குறிவைத்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அதில், 23 தீவிரவாதக் குழுக்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் இம்மாதம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள் தாங்களாக சரணடைந்தால், தண்டனை குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.