சிலாங்கூரில் “நீல அலை” கண்ணுக்குத் தெரிவதாக துணைப் பிரதமர் முஹைடின் யாசின் இன்று கூறியிருக்கிறார். அந்த மாநிலம் மீண்டும் பிஎன் ஆட்சிக்குத் திரும்ப வேண்டும் என்ற மக்கள் விருப்பத்தை அது காட்டுவதாக அவர் சொன்னார்.
“சிலாங்கூர் முழுவதும் நீல அலை தென்படுகிறது. பிகேஆர்-டிஏபி-பாஸ் கூட்டுக்கு ஆட்சியுரிமையை வழங்கிய மூன்று ஆண்டுகளில் பல பிரச்னைகள் எழுந்துள்ளதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்,” என அவர் குறிப்பிட்டார். சிலாங்கூரில் பிகேஆர் தலைமையில் இயங்கும் மாநில அரசாங்கத்தைப் பற்றியே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
டெங்கில் தேசிய வகை சீனத் தொடக்கப்பள்ளியில் ‘மக்களுடன் ஒரே மலேசியா காலை உணவு’ என்னும் நிகழ்வில் முஹைடின் பேசினார்.
அவர் இன்று சிலாங்கூருக்கு ஒரு நாள் பயணத்தை மேற்கொண்டுள்ளார். சிலாங்கூர் மாநில அரசாங்கம் தங்களுடைய தேவைகளையும் நலன்களையும் புரிந்து கொள்ளத் தவறி விட்டதாக அந்த மாநிலத்தைச் சேர்ந்த பலர் புகார் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“சிலாங்கூரில் பலர் குறிப்பாக வணிகர்கள் என்னைச் சந்தித்து அடுத்த பொதுத் தேர்தல் எப்போது நிகழும் எனக் கேட்கின்றனர். வருமானம் தேடுவதற்கு வர்த்தகம் செய்வதற்குக் கூட சிரமமாக இருப்பதாக புகார் செய்த அவர்கள், பக்காத்தான் அரசாங்கம் போதும் என்ற நிலைக்கு தாங்கள் வந்து விட்டதாகவும் தெரிவித்தனர்,” என கூறிய துணைப் பிரதமர் அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன்-னுக்கு வாக்களிக்க விரும்புவதாகவும் அவர்கள் சொன்னாதாகத் தெரிவித்தார்.
50 ஆண்டு கால அனுபவத்தைப் பெற்றுள்ள பிஎன் மக்களுடைய விருப்பங்களுக்கு இணங்க மலேசியாவை மென்மேலும் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல முடியும் என்பது மக்களுக்குத் தெரிந்துள்ளதாகவும் முஹைடின் கூறிக் கொண்டார்.