சிரியாவில் அதிபர் அல்-அசாதுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள மிதவாதத் தன்மை கொண்ட அமைப்புகளுக்கு ராணுவப் பயிற்சி வழங்க அமெரிக்க அதிபர் ஒபாமா விரைவில் ஒப்புதல் வழங்குவார் என கூறப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது:
அதிபர் ஒபாமா ஒப்புதல் அளிக்க உத்தேசித்துள்ள திட்டத்தின்படி, சுதந்திர சிரியா ராணுவத்திலிருந்து (கிளர்ச்சியாளர்கள் குழு) கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு ஜோர்டான் நாட்டில் அமெரிக்கத் துருப்புகள் பயிற்சியளிக்கும்.
ஒப்புதல் அளிப்பதற்கு முன்பாக, இத்திட்டத்தில் உள்ள நன்மைகள் மற்றும் அபாயங்கள் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது.
ராணுவ ரீதியிலான தலையீடு இல்லாதவரை, அதிபர் அல்-அசாதை ஒருபோதும் பதவியிலிருந்து வெளியேற்ற முடியாது என்று கருதும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இத்திட்டத்துக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளனர்.
எனினும், அதிபருக்கு எதிராகப் பேராடும் மத அடிப்படைவாதிகளும், அல்-காய்தாவோடு தொடர்புடைய அமைப்புகளும் இத்திட்டத்தின் மூலம் ஆதாயம் அடையக்கூடும் என்ற அச்சத்தையும் மற்றொரு தரப்பினர் எழுப்பியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கெனவே, சிரியா அதிபரின் எதிர்ப்பாளர்களுக்கு, ஆயுதங்களல்லாத பொருள்கள் மற்றும் நிதியுதவியை அமெரிக்கா அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.