புதிய கூட்டமைப்பு துவக்கியது ரஷ்யா

russia_putinமாஸ்கோ: ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து, தங்களின் பொருளாதார மற்றும் வர்த்தக வசதிக்காக, ஐரோப்பிய யூனியன் என்ற கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. 28 நாடுகள், இந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன. இந்த நாடுகளுக்காக, ‘யூரோ’ என்ற நாணய முறையும் அமலில் உள்ளது. இந்நிலையில், ரஷ்யாவும், இது போன்ற கூட்டமைப்பை தற்போது உருவாக்கியுள்ளது. சோவியத் யூனியனில் அங்கம் வகித்த நாடுகளான, கஜகஸ்தான், பெலாரஸ் ஆகிய நாடுகளுடன் இணைந்து, யுரோசியா என்ற அமைப்பை, ரஷ்யா உருவாக்கியுள்ளது.

கஜகஸ்தான் அதிபர் நூர்சுல்தான் கூறியதாவது: ஐரோப்பிய யூனியனுக்கு போட்டியாக இந்த கூட்டமைப்பை உருவாக்கியதாக கூறுவது தவறு. முழுக்க, முழுக்க பொருளாதார ரீதியான நடவடிக்கைகளுக்காகவே, இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சோவியத் யூனியனை மீண்டும் உருவாக்கும் முயற்சியாகவும், இதை கருதக் கூடாது, என்றார்.

ரஷ்ய அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்த ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முதல், அமலுக்கு வரவுள்ளது. இயற்கை எரிவாயு வளங்களை பகிர்ந்து கொள்வது, மூன்று நாடுகளுக்கும் ஒரே சுங்க வரி விதிப்பது போன்றவை, இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்’ என்றன.