உலக மக்களின் புகைப்படங்களை அமெரிக்க உளவுத்துறை இரகசியமாக சேகரிக்கிறது என அந்நாட்டின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகளவில் வசிக்கும் மக்களில் லட்சக்கணக்கானோரின் முகத்தோற்ற படங்கள் நாள்தோறும் இரகசியமாய் அமெரிக்க உளவுத்துறையால் சேகரப்பட்டு வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளாக அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம், மின்னஞ்சல்,கைபேசி மூலம் அனுப்பபடும் செய்திகள், சமூக வலை தளங்கள், வீடியோ கான்பரன்சிங் ஆகியவற்றில் இருந்து முகத்தோற்ற படங்களை சேகரித்து வருகிறது.
இந்த புதிய முறையின் மூலம், உலகம் முழுவதும் உள்ள தீவிரவாதிகள் மற்றும் பிற நாடுகளின் உளவாளிகளை அடையாளம் காண முடியும் என அமெரிக்க கருதுகிறது.
ஆனால் இதுவரை எவ்வளவு பேரின் முகத்தோற்ற படங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்றும் அதில் எவ்வளவு பேர் அமெரிக்கர்கள் எனவும் தெரியவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து என்.எஸ்.ஏ. செய்தி தொடர்பாளர் வாணி எம் வின்ஸ் கூறுகையில், ஒட்டுநர் உரிமம் கோரும் விண்ணப்பம், கடவுச்சீட்டு கோரும் விண்ணப்பங்களில் உள்ள புகைப்படங்களை சேகரிக்க என்.எஸ்.ஏ.வுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என கூறியுள்ளார்.
மேலும் வெளிநாடுகளில் இருந்து விசா கோரி விண்ணப்பிப்பவர்களின் புகைப்படங்கள், பேஸ்புக் மற்றும் பிற சமூக வலைதளங்களில் உள்ள புகைப்படங்களை என்.எஸ்.ஏ. சேகரிக்கிறதா? என்ற ஊடகங்களின் கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்துள்ளார்.