நைஜீரியா கால்பந்து மைதானத்தில் குண்டு வெடிப்பு: 40 பேர் பலி

Nigeria-plane-crashஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கால்பந்து மைதானத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 40 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து போலீஸார் கூறியதாவது:

நைஜீரியாவின் வடக்குப் பகுதியிலுள்ள ஆடமாவா மாகாணத்தின் முபி நகரில் உள்ள கால்பந்து மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

உள்ளூர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியைப் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்களை குறிவைத்து இந்தக் குண்டு வெடிப்பை தீவிரவாதிகள் நிகழ்த்தியுள்ளனர்.

இச்சம்பவத்தில் கால்பந்து வீரர்கள் யாரும் உயிரிழந்தனரா என்பது உடனடியாகத் தெரியவில்லை. ஆனால், உயிரிழந்தவர்களில் பலர் ரசிகர்கள் என்று தெரியவந்துள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.

கேமரூன் எல்லையையொட்டிய இதே பகுதியில் 2012ஆம் ஆண்டு கல்லூரி ஒன்றில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ஏராளமான மாணவர்கள் உயிரிழந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் இரு இத்தாலிய பாதிரியார் மற்றும் ஒரு கன்னியாஸ்திரியை போகோ ஹராம் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.

அவர்கள் 3 பேரும் மாரோவா நகர் அருகே ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருவர் கைது: இதனிடையே, நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவில் செய்தியாளர்களிடம் ராணுவச் செய்தித் தொடர்பாளர் கிறிஸ் ஒலுகோலாடே கூறுகையில், “”குண்டு வெடிப்புக்கு முக்கிய காரணமாகக் சந்தேதகிக்கப்படும் நபர் ஒருவரை ராணுவ வீரர்கள் கைது செய்தனர். குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் இருந்து தப்பி ஓட முயன்றபோது அந்த நபர் சுற்றி வளைக்கப்பட்டார்” என்றார்.