ரஷ்யா மீதான உலக மனநிலை மோசமடைந்துள்ளது: பிபிசி ஆய்வு

russia_putinஉலக மக்கள் மத்தியில் ரஷ்யா தொடர்பான மனோபாவம் கடந்த ஆண்டில் மிகக் கடுமையாக மோசமடைந்துள்ளதாக பிபிசியினால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பொன்றில் தெரியவந்துள்ளது.

யுக்ரேனின் கிரைமீயா பிராந்தியம் ரஷ்யாவுடன் இணைத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னதாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 45 வீதமான மக்களின் கருத்துக்கள் ரஷ்யாவுக்கு எதிரானவையாக உள்ளன.

அமெரிக்கா மீதான விருப்பமும் மக்கள் மத்தியில் வீழ்ச்சிடைந்துள்ளது.

மற்ற நாடுகள் மீதான அமெரிக்காவின் ரகசிய கண்காணிப்புத் திட்டங்களே இந்த எதிர்ப்பு மனநிலைக்குக் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உலகெங்கில் 24 நாடுகளைச் சேர்ந்த 25 ஆயிரம் மக்களிடம் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

மக்கள் விருப்பத்தில் ஜெர்மனியே மிகவும் பிரசித்தி பெற்றுள்ள நாடாக விளங்குகிறது.

இரான், பாகிஸ்தான், வடகொரியா உள்ளிட்ட நாடுகள் விருப்பப் பட்டியலில் கடைசிப் பட்டியலில் உள்ளன.

ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பான மனநிலையும் ஐரோப்பிய நாடுகளின் குடிமக்கள் மத்தியில் சற்று வீழ்ச்சியடைந்திருக்கிறது.

ஸ்பெயினில் 19 வீதமானோரும் ஜெர்மனியில் 10 வீதமானோரும் பிரான்ஸில் 7 வீதமான மக்களும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். -BBC