உக்ரைன் புதிய அதிபருடன் புதின் சந்திப்பு: பிரச்னைக்குத் தீர்வு காண பேச்சு

russia_putinரஷிய அதிபர் விளாதிமீர் புதினும், உக்ரைனில் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெட்ரோ போரோஷென்கோவும் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து, உக்ரைனில் போர் நிறுத்தம் மோற்கொள்வதற்கான வாய்ப்புகளைக் குறித்து விவாதித்தனர்.

இரண்டாம் உலகப் போரின்போது நாஜிக்களின் ஆக்கிரமிப்பிலிருந்து பிரான்ûஸ விடுவிக்க நேச நாடுகளின் படைகள் அந்நாட்டின் நார்மண்டி பகுதியில் நடவடிக்கை மேற்கொண்டதன் 70-ஆவது ஆண்டையொட்டி, வெள்ளிக்கிழமை அங்கு “டி-டே’ விழா கொண்டாடப்பட்டது.

அந்நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், பிரான்ஸ் அதிபர் ஃபிரான்சுவா ஹொலாந்த் உள்ளிட்ட நேச நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

கேமருன்: அதனைத் தொடர்ந்து விளாதிமீர் புதினை பிரிட்டன் பிரதமர் கேமரூன் சந்தித்துப் பேசினார்.

அப்போது, உக்ரைன் மீதான தலையீட்டை முடிவுக்கு கொண்டு வரும்படி ரஷிய அதிபர் புதினிடம், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் வலியுறுத்தினார்.

ஒபாமா: அதனையடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமாவும், புதினைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

உக்ரைன் பிரச்னையால் இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், முதல்முறையாக இந்த இரு தலைவர்களும் சந்தித்துப் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இது குறித்து அமெரிக்க துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பென் ரோட்ஸ் கூறுகையில், “இரு தலைவர்களும் 15 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இது அதிகாரப்பூர்வ சந்திப்பு அல்ல. இந்தப் பேச்சுவார்தையின் போது இரு நாட்டு உறவுகள் குறித்து ஏதும் பேசவில்லை’ என்று கூறினார்.

போரோஷென்கோ: இதையடுத்து விளாதிமீர் புதின், உக்ரைனின் புதிய அதிபராகப் பதவியேற்கவுள்ள போரோஷென்கோவை முதல் முறையாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, உக்ரைன் பகுதியில் நடைபெற்று வரும் தாக்குதல் சம்பவங்களை நிறுத்துவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷிய ஆதரவுப் படையினருக்கும், அரசு படையினருக்கும் மோதல் நிகழ்ந்து வரும் உக்ரைனில், அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு போரோஷென்கோ ரஷிய அதிபர் புதினைச் சந்திப்பது இதுவே முதல்முறை.

இதுகுறித்து, இந்தச் சந்திப்பு நிகழ்ந்த பிரான்ஸ் நாட்டின் அதிபர் ஹொலாந்தின் உதவியாளர் ஒருவர் கூறுகையில், “”சுமார் 15 நிமிடங்கள் நீடித்த அந்தப் பேச்சுவார்த்தையின்போது, பதற்றத்தைத் தணிப்பது, போரோஷென்கோவை உக்ரைன் அதிபராக ரஷியா அங்கீகரிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்” என்று தெரிவித்தார்.