ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு: அதிபர் பதவி வேட்பாளர் உயிர் தப்பினார்

AbdullahAbdஆப்கானிஸ்தானில் அதிபர் பதவி வேட்பாளர் அப்துல்லா அப்துல்லாவைக் குறிவைத்து வெள்ளிக்கிழமை இரு இடங்களில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களில் அவர் நூலிழையில் உயிர் தப்பினார்.

திருமண மண்டபம் ஒன்றில் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு அவர் திரும்பியபோது, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சேதிக் சேதிக்கி கூறுகையில், “அப்துல்லாவின் பாதுகாப்பு வாகனங்கள் சாலையில் வந்துகொண்டிருந்தபோது, சாலையோரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை தற்கொலைப் படையினர் வெடிக்கச் செய்தனர். இதில், பொதுமக்கள் 4 பேர் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் கூட அப்துல்லாவின் ஆதரவாளர் இல்லை’ என்றார்.

ஆனால், இரு இடங்களில் தற்கொலைப் படையினர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதலில், அப்துல்லாவின் பாதுகாப்பு வாகனங்கள் வந்து கொண்டிருந்தபோது, வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதியொருவர் தாக்குதல் நடத்தினார் என்றும், மற்றோர் இடத்தில் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் தனது காலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதல் நடந்தவுடன், அப்துல்லா தொலைக்காட்சியில் பேட்டியளித்தார். அப்போது, இந்த தாக்குதலில் தனக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், தனது பாதுகாவலர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டது என்றும் அவர் கூறினார். இந்த வெடிகுண்டு தாக்குதலின் பின்னணி குறித்து உடனடியாகத் தெரியவில்லை.