தலாய் லாமாவுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை

திபெத்தில் பதற்றத்தை தணிக்கும் விதமாக அந்நாட்டைச் சேர்ந்த புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சீனாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ஃப் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

சீனாவின் திபெத் பகுதியில் நிலவும் மனித உரிமைகளின் நிலை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம் என்பதை நீண்டகாலமாக கூறி வருகிறோம்.

அந்தப் பகுதியில் பதற்றத்தை தணிக்கும் வகையில் தலாய் லாமா மற்றும் அவரது பிரதிநிதிகளுடன் சீன அரசு நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம்.

திபெத்தில் தனிப்பட்ட கலாசாரத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள சீனாவின் கொள்கைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

திபெத் மற்றும் சீனாவில் திபெத்தியர்கள் வசிக்கும் பகுதியில் தூதரக அதிகாரி பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறோம் என்று மேரி ஹார்ஃப் கூறினார்.

இதனிடையே, “திபெத்தின் நிலைமை குறித்து தலாய் லாமாவின் பிரத்யேக தூதரிடம் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். ஆனால், அவர்கள் கேட்கும் தனிச் சுதந்திரமோ அல்லது பாதியளவு சுதந்திரமோ வழங்குவது பற்றி எத்தகைய பேச்சும் இருக்கக் கூடாது’ என்று சீனா கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“வீண் முயற்சி’-சீனா: சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஹாங் லீ கூறியதாக “ஜின்ஹுவா’ செய்தி நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில், “திபெத்தின் பிரிவினைவாதத் தலைவரான முன்னாள் பிரதமர் லாப்சாங் சங்கே தலைமையில், அந்தப் பிராந்தியத்துக்கு சட்ட ரீதியாக தன்னாட்சி கோருவது வீண் முயற்சி.

திபெத் மக்களுக்காக அவர் எதையும் செய்யவில்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.