கடத்தப்பட்ட நைஜீரிய மாணவிகள் மீது பாலியல் வன்முறை அபாயம்

boko_haram_abducted_girlsநைஜீரியாவில் கடத்தப்பட்டு இன்னும் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்கார வன்முறைக்கு ஆளாகும் அபாயம் உள்ளதாக ஐ.நா. எச்சரித்துள்ளது.

நியூயார்க்கில் உள்ள பிரிட்டன் இல்லத்தில் நடைபெற்ற மதிய உணவு விருந்தின்போது பாலியல் வன்முறை தடுப்பு பிரிவுக்கான ஐ.நா. சிறப்பு பிரதிநிதி சைனாப் ஹவா பங்குரா கூறுகையில், “”கடத்தப்பட்ட பள்ளி மாணவிகளில் பாதி பேர் கர்ப்பமாக திரும்பி வரக்கூடாது என்பதுதான் எங்கள் கவலை. மாணவிகள் அனைவரும் பத்திரமாகத் திரும்பி வர வேண்டும் என்று காத்திருக்கும் பெற்றோருக்கு மன ரீதியாகவும், பிற வகையிலும் உதவிகளைச் செய்ய வேண்டிய கடமை சர்வதேச சமுதாயத்துக்கு உள்ளது” என்றார்.

இதனிடையே, லண்டனில் பாலியல் வன்முறைக்கு எதிரான போராட்டம் குறித்த கூட்டம் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. அதில், பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக் மற்றும் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி தலைமை வகிக்கின்றனர். சைனாப் ஹவா பங்குரா, பிரிட்டிஷ் தூதர் மற்றும் பத்திரிகை ஆசிரியர் டினா பிரெளன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

அந்தக் கூட்டத்தில் நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகள் தீவிரவாதிகளால் சந்திக்க நேரிடும் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும்.

குறிப்பாக, அந்த மாணவிகள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டு கர்ப்பமாக நேர்ந்தால் அவர்களுக்கு கருக்கலைப்பு செய்யலாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.