பாகிஸ்தானின் மிகப் பெரிய நகரான கராச்சியிலுள்ள விமான நிலையத்தின் மீது துப்பாக்கிதாரிகள் நடத்தியத் தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கிச் சுட்டும் தமது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
அந்த விமான நிலையத்தில், சரக்குகளை ஏற்றி இறக்கும் முனையம் மற்றும் மிகவும் முக்கியாமனவர்கள் வந்துசெல்லும் பகுதியிலிருந்து அடர்த்தியான புகை மண்டலம் வெளிவருவதை தொலைக்காட்சிப் படங்கள் காட்டின.
விமான நிலையத்துக்குள் சில பயணிகளும் ஊழியர்களும் சிக்குண்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தாக்குதலை அடுத்து, விமான நிலையத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளையும் மூடியுள்ள இராணுவ வீரர்களும் காவல்துறையினரும் அப்பகுதி முழுவதையும் சுற்றி வளைத்துள்ளனர்.
கராச்சி விமான நிலையத்துக்கு வந்து செல்ல வேண்டிய விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. -BBC