நைஜீரியாவில் கடத்தப்பட்டுள்ள பள்ளிக்கூட மாணவிகளை விடுவிப்பது தொடர்பாக ஆயுதக் குழுவினருடன் பேச்சுவார்த்தை-பேரங்களில் ஈடுபட்டுள்ள ஆங்கிலிக்கன் திருச்சபை பாதிரியார் ஒருவர், அப்பெண்களில் பெரும்பான்மையானோர் நாட்டுக்கு வெளியில் குறைந்தது மூன்று இடங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.
தன்னோடு சேர்ந்து செயலாற்றும் உள்ளூர்காரர்கள் சிலர், இந்தப் பெண்களை பார்க்க நேர்ந்துள்ளது என ஆஸ்திரேலியரான டாக்டர் ஸ்டீஃபன் டேவிஸ் தெரிவித்துள்ளார்.
தம்மைக் கடத்தி தடுத்துவைத்துள்ள போக்கோஹராம் இஸ்லாமியவாத அமைப்பின் உறுப்பினர்களுக்கு துணி துவைக்கும் வேலையை அம்மாணவிகள் செய்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஓரிடத்தில் சமையல் வேலையிலும் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
ஒரு சிலரையாவது விடுவிக்கச் செய்கிற நெருக்கத்துக்கு பேச்சுவார்த்தையாளர்கள் வந்திருந்தனர் என்றும், ஆனால் கடைசி நிமிடத்தில், தாங்கள் கைதுசெய்யப்படலாம் என்ற அச்சம் வந்து போக்கோ ஹராம் தலைவர்கள் பின்வாங்கிவிட்டார்கள் என்றும் டாக்டர் டேவிஸ் கூறினார்.
பலப்பிரயோகம் செய்து அந்த மாணவிகளை மீட்க முயலுவது பாதகமான விளைவைத் தரலாம், ஏனென்றால் மற்றவர்களை கடத்தும் வேலையில் போக்கோ ஹராம் இறங்கிவிடும் என்று அவர் எச்சரித்துள்ளார். -BBC