பாகிஸ்தானின் விமான நிலையம் மற்றும் பஸ்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து கராச்சியில் பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையக் கட்டடத்துக்குள் தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அதிரடியாகப் புகுந்தனர். அங்கு கண்ணில் தென்பட்டவர்கள் மீது சரமாரியாக சுட்டனர்.
அவர்களை ராணுவ வீரர்கள், கமாண்டோப் படை வீரர்கள், துணை நிலை ராணுவத்தினர் மற்றும் போலீஸார் இணைந்து சுற்றி வளைத்து சுட்டுக்கொன்றனர். ராணுவத்துக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றது. தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசியதில் விமான நிலையம் புகை மண்டலமாக காட்சியளித்தது.
இந்தச் சண்டையில் 10 தீவிரவாதிகள் உள்பட 23 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.
தற்போது விமான நிலையம் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. இந்தத் தாக்குதலின்போது விமானங்களுக்கு சேதம் ஏற்படவில்லை.
கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து ராக்கெட் லாஞ்சர், கனரக துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன என்று அந்தச் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
எனினும், விமான நிலையத்தில் 3 தீவிரவாதிகள் இன்னும் பதுங்கியிருப்பதாகவும், அவர்கள் துப்பாக்கியால் சுட்ட சப்தம் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளதாக ஜியோ தொலைக்காட்சி செய்தி தெரிவித்தது.
தீவிரவாதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து 6 மணி நேரம் விமானப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.
23 பக்தர்கள் சாவு: இதனிடையே, குவெட்டாவில் செய்தியாளர்களிடம் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மீர் சர்ஃப்ராஸ் புக்தி திங்கள்கிழமை கூறுகையில், “”பலூசிஸ்தான் மாகாணத்தில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் புனித யாத்திரை சென்ற 10 பஸ்கள் தாஃப்டான் அருகில் உள்ள ஒரு ஹோட்டல் முன்பு ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது அந்த பஸ்களில் இருந்த யாத்ரிகர்கள் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியபடி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
உடனே யாத்ரிகர்கள் கலைந்து ஓடினர். அதையறிந்த பாதுகாப்புப் படைவீரர்கள் தீவிரவாதிகள் மீது எதிர்த்தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகள் சுட்டதில் 23 யாத்ரிகர்களும், பாதுக்காப்புப் படை வீரர்கள் சுட்டதில் 4 தீவிரவாதிகளும் உயிரிழந்தனர்” என்றார்.
இந்த தாக்குதலுக்கு, தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-உல்-இஸ்லாம் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.