இராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மோசுலிலுள்ள முக்கியமான அரச கட்டிடங்களை இஸ்லாமியத் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர்.
இதன்மூலம் மோசுல் நகரின் முழுக் கட்டுப்பாடு அவர்கள் வசம் வந்துள்ளது.
லெவண்ட் மற்றும் இஸ்லாமிய இராக் தேசம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த ஆயுததாரிகள் உள்ளூர் விமான நிலையத்தை கைப்பற்றியுள்ளனர் என்றும், ஆயிரக்கணக்கான கைதிகளை விடுவித்துள்ளனர் என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இராணுவம் மற்றும் காவல்துறையினர் தமது நிலைகளை கைவிட்டு ஓடிவிட்டனர் என்றும், நகரிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேறியுள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மோசுல் நகரின் ஆளுநரும் வெளியேறிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
தீவிரவாதிகள் மோசுல் நகரை மட்டுமல்ல, நினேவே மாகாணம் முழுவதையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர் என்று இராக்கிய நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
அந்தப் பகுதிகளுக்கு உடனடியாக அரச துருப்புக்கள் அனுப்பப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். -BBC