தொடர் தாக்குதல் எதிரொலி: சீனாவில் தஞ்சம் அடையும் பாக். மைனாரிட்டி முஸ்லிம் சமூகம்

ahmadiahsசன்ஹே, ஜூன் 19-

பாகிஸ்தானில் பழங்குடியினர் வாழும் வடக்கு வசிரிஸ்தான் பகுதி தலிபான் தீவிரவாதிகளின் மறைவிடமாகவே கருதப்படுகின்றது. பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் ஷெரிப் இவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி ரத்தம் தோய்ந்த கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த ஆண்டு துவக்கத்தில் முயற்சித்தபோதும் பலன் கிட்டவில்லை. இதனைத் தொடர்ந்து மீண்டும் இருபுறமும் தாக்குதல்கள் தொடங்கியுள்ளதுதான் பாகிஸ்தானில் தற்சமயம் காணப்படும் நிலவரமாகும்.

இந்த பிரிவினையில் அங்கு வாழும் மைனாரிட்டி சமூகத்தினர் மிகவும் பாதிப்படைகின்றனர். அவர்களில் அஹமதி முஸ்லிம்கள் எனப்படும் சமூகத்தினரும் ஒருவராவர். 19-ம் நூற்றாண்டில் இவர்கள் மதத்தை ஸ்தாபித்தவரான குலாம் அஹமது ஒரு தீர்க்கதரிசி என்றும், ஏசுநாதர் தனது 120-வது வயதில் இந்தியாவின் காஷ்மீர்ப் பகுதியில் இறந்தார் என்றும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ஆனால் இஸ்லாமியக் குடியரசின் அரசியலமைப்பு இவர்களை முஸ்லிம் இனத்தவராக ஏற்றுக்கொள்ள மறுத்ததோடு ஹஜ் யாத்திரை செல்லவும் தடை விதிக்கின்றது. அதுமட்டுமின்றி இவர்களின் மசூதிகளும், இடுகாடுகளும் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றன. இவர்கள் சமூகத்தைச் சேர்ந்தவரும் நோபல் பரிசு பெற்றவருமான இயற்பியல் பேராசிரியரான அப்துஸ் சலாமுமே பெரிதான பாராட்டுதல்களைப் பெறவில்லை.

இத்தகைய பாரபட்சமான நடைமுறை மற்றும் வன்முறைகளில் இருந்து தப்பிக்க எண்ணிய நூற்றுக்கணக்கான அஹமதி சமூகத்தினர் சீனாவில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இத்தகைய அகதிகளை பொதுவாக சீனா ஏற்றுக்கொள்ளும்போதும் அவர்களுக்கென எந்த உதவிகளையும் செய்வதில்லை என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டாகும். அதேபோல் வடகொரியா மற்றும் மியான்மரில் இருந்து இங்கு வரும் அகதிகளில் பெரும்பான்மையானோரை சீனா திருப்பி அனுப்புவதாக மனித உரிமைக் குழுக்கள் குற்றம் சாட்டுகின்றன.

ஆனால் பாதுகாப்பையோ, மைனாரிட்டி சமூகத்தினருக்கு எதிரான வன்முறைக் கலவரங்களையோ ஒப்பிடுகையில் சீனாவில் மிகவும் பாதுகாப்பாக உணருவதாக இவர்கள் குறிப்பிடுகின்றனர்.