இன்று உலக அகதி நாள் (World Refugee Day) நினைவுகூரப்பட்டு வருகின்றது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் 20ஆம் திகதி அகதிகள் நாள் நினைவுகூரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2000 ஆம் ஆண்டிலிருந்தே உலக அகதிகள் நாள் நினைவு கூரப்பட்டு வருகின்றது அதாவது 2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஆபிரிக்க அகதிகள் நாள் ஜூன் 20 இல் கொண்டாடப்படுவதால் இந்நாள் உலக அகதிகள் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
இலங்கையில் போர் நடைபெற்ற போது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்றனர்.
மேலும் பலர் உள்நாட்டில் அகதிகளாக இடம்பெயர்ந்தனர். போர் முடிவுக்கு வந்த பின்னர், சுமார் மூன்று லட்சம் மக்கள் இராணுவ நிர்வாகத்திற்குட்பட்ட முகாம்களில் அடைக்கப்பட்டனர்.
அவர்களை சொந்த இடங்களில் குடியேற்றியுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
எனினும் 90 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணம் பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் அவர்களின் உறவினர்கள் நண்பர்கள் வீடுகளிலும் முகாம்களில் வசித்து வருகின்றனர்.
திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியை சேர்ந்த மக்களில் பலர் இன்னும் தற்காலிக முகாம்களில் வாசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
போர் மற்றும் தமது சொந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக கடந்த வருடத்தில் மாத்திரம் 50 மில்லியன் மக்களுக்கும் மேல் இடம்பெயர்ந்து அகதிகளாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
2013 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது கடந்த வருடத்தில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 6 மில்லியனாக அதிகரித்துள்ளது என அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.
சிரியா, மத்திய ஆப்பிரிக்கா மற்றும் தென் சூடான் நாடுகளில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரே அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.
இடம்பெயர்ந்துள்ள அகதிகளின் அதிகளவானவர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் அந்த நாட்டில் 2.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் எனவும் உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது.
இதனை தவிர பாகிஸ்தானில் 1.6 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாகியுள்ளனர்.
எனவே இவர்களது வாழ்க்கை ஒரு கேள்விக்குறியாகவே மாறியுள்ளது. சொந்த நாடு விட்டு உறவுகளை விட்டு வெளியேறிய மக்களுக்கு ஒரு விடிவு காலம் கிட்டுமா?