உக்ரைன் எல்லையில் தனது படைகளை ரஷியா மீண்டும் குவித்து வருவதாக “நேட்டோ’ அமைப்பு புகார் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் புதிய அதிபர் பெட்ரோ போரோஷென்கோ, ஐரோப்பிய யூனியனுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதுடன், மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான நடவடிக்கையில் ஈடுபடுவதால் கோபமடைந்துள்ள ரஷியா இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் “நேட்டோ’ குற்றம் சாட்டியுள்ளது.
உக்ரைன் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதையடுத்து அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரும், ஜெர்மனிக்கான தூதருமான பால்வோ கிளிம்கின் தலைமையிலான பிரதிநிதிகள் ஐரோப்பிய யூனியனுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளனர். இதனால், உக்ரைன் கிழக்குப்பகுதியில் நிலவும் பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து ரஷியாவுடனான பேச்சுவார்த்தைக்கான கதவுகள் சாத்தப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, போரோஷென்கோ கடந்த செவ்வாய்க்கிழமை ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, 1991ஆம் ஆண்டு உக்ரைன் சுதந்திரம் பெற்றதில் இருந்து சந்தித்து வரும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதை புதினிடம் அவர் வலியுறுத்தினார். மேலும், 10 வாரங்களுக்கு ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மீதான நடவடிக்கையை நிறுத்திவைக்கவும் போரோஷென்கோ ஒப்புக்கொண்டார். ஆனால், உக்ரைனின் கிழக்குப்பகுதிக்கு விடுதலை கோரும் கிளர்ச்சியாளர்கள் இதை ஏற்கவில்லை. எனினும், போரோஷென்கோவின் கருத்துக்கு ரஷியா இசைவு தெரிவித்துள்ளது.