வாஷிங்டன்: அமெரிக்காவில் அரசுக்கு சொந்தமான , நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி கூடத்தில் பணியாற்றி வரும் 75 விஞ்ஞானிகளுக்கு ஆந்தராக்ஸ் எனப்படும் விஷகிருமி தாக்கியுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை யெனில்பலருக்கும் பரவி விளைவுகள் பயங்கரமாகி விடும் எனவும் எச்சரிக்கைவிடபட்டுள்ளது.
அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் சி.டி.சி., எனப்படும் அரசுக்கு சொந்தமான உயிரியல் ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு பல்வேறு நோய்களை கண்டறியும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம், சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு ஆகியன, கடந்த 13-ம் தேதியன்று விஞ்ஞானிகளுக்கு சாதாரண பரிசோதனை செய்ததில் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்களை ஆந்த்ராக்ஸ் எனப்படும் விஷ கிருமி தாக்கியுள்ளதை அம்பலப்படுத்தியுள்ளனர். இந்த கிருமி தங்களுக்கு தாக்கியுள்ளதை அறியாமலேயே அவர்கள் வாழ்ந்து வருவதும் தெரியவந்துள்ளது. போதிய பாதுகாப்பு மற்றும் உரியதடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள சி.டி.சி.தவறியதே இதற்கு காரணம் எனவும் தெரியவந்துள்ளது.
இது குறித்து சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பின் இயக்குனர் டாக்டர் பவுல் மீச்சன் கூறுகையில், கிருமி தாக்கியுள்ள 75 விஞ்ஞானிகளும் தொடர்ந்து 60 நாட்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். சிப்ரோபிளாக்ஸாசின் என்ற ஆன்டிபாடி மருந்தினை ஊசி மூலம் செலுத்தி கொள்ள வேண்டும். இல்லையேல் பலருக்கும் பரவி விளைவுகள் மோசமாகிவிடும் . இக்கிருமி எப்படி பரவியது என்பது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி மேலும் பரவாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இது வெறும் வதந்தி எனவும் எந்த விஞ்ஞானிகளுக்கோ, ஊழியர்களுக்கோ கிருமி தாக்கியதாக தகவல் இல்லை எனவும் கூறுகின்றனர். இந்த விவகாரம் குறித்து சி.டி.சி.யின் இயக்குனர் தாமஸ் ப்ரீதின் கூறுகையில், அப்படி யாருக்கும் கிருமி தாக்கியுள்ளதாக இதுவரை உறுதிசெய்யப்படவில்லை என்றார்.
நோய் எவ்வாறு பரவுகிறது:
மனிதர்களை மட்டுமல்ல விலங்குகளையும் தாக்கும் இந்த ஆந்த்ராக்ஸ் கிருமி,மாமிச உணவு வகைகள் சாப்பிடுவது,தோலில் வெட்டு காயம் ஏற்பட்டு ரத்தக்கசிவு ஏற்படும் போதுஆகியவற்றாலும், திசுக்கள் வழியாகவும், இக்கிருமி தாக்கியவர்கள் மூச்சு விடும் போது மூச்சு காற்று வழியாகவும்பரவுகிறது.
நோய் அறிகுறிகள்:
ஆந்த்ராக்ஸ் இரண்டு கட்டங்களாக பரவுகிறது. முதல்கட்டமாக இக்கிருமியால் தாக்கப்பட்டவர்களுக்கு ஜலதோசம் அல்லது கடும் காய்ச்சல் தோன்றும். இரண்டாவது கட்டமாக காய்ச்சலுடன் மூச்சு திணறல் ஏற்படும் ,இதில் இரண்டாம் கட்டமாக பரவினால் எப்படி சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் குணமாகாது 90 சதவீத மரணம் உறுதி .