பயங்கரவாதிகள் பிடியில் மனித கேடயங்களாக இந்தியர்கள்: தப்பி வந்த பஞ்சாபியர் திடுக்கிடும் தகவல்

 

பாக்தாத்: ‘ஈராக்கில், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் வசம் பிடிபட்டுள்ள, 39 இந்தியர்களும், மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப் படுகின்றனர்’ என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஆசியா கண்டத்தின் மேற்கு ஓரத்தில், பெர்சியன் வளைகுடா நாடுகளில் ஒன்றான ஈராக்கில், ஷியா பிரிவு முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த பிரதமர், நுாரி அல் – மாலிகி தலைமையிலான அரசு, 2006 முதல் பதவியில் உள்ளது.

அல் – குவைதா

இந்த அரசு, சன்னி பிரிவு முஸ்லிம்களை துன்புறுத்தியதால், சன்னி முஸ்லிம்களுக்கு ஆதரவான, அல் – குவைதா பயங்கரவாதி அமைப்பினர், ஈராக்கில் நுழைந்தனர்.மனித வெடிகுண்டு, கார் வெடிகுண்டு போன்ற தாக்குதல்களை நிகழ்த்தி, ஈராக் அரசுக்கு எதிராக சண்டையிட்டு வந்த, அல் – குவைதா ஆதரவு, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், இந்த மாதத் துவக்கத்திலிருந்து, பல நகரங்களைக் கைப்பற்றி, அரசு படையினரைக் கொன்று குவித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 15ல், அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மொசூல், பயங்கரவாதிகள் வசம் வீழ்ந்தது. அப்போது, அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய தொழிலாளர்கள், 40 பேர், பயங்கரவாதிகள் வசம் சிக்கிக் கொண்டனர்.அவர்கள் பிடியில், வங்கதேசம் போன்ற பிற நாட்டவர்களும் சிக்கியுள்ளனர். அவ்வாறு பயங்கரவாதிகள் வசம் சிக்கியிருந்த, 40 இந்திய தொழிலாளர்களில், ஹர்ஜித் சிங் என்பவர், கடந்த 20ல், தப்பி, இர்பில் என்ற நகரில், குர்து இன மக்களிடம் தஞ்சம் அடைந்துள்ளார். அங்கிருந்து அவர், பாக்தாத் நகரில் உள்ள இந்திய துாதரகத்தை தொடர்பு கொண்டு, தன்னை வந்து மீட்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அவரிடம், போனில், இந்திய துாதரக அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.

சமையல்காரர்கள்

பயங்கரவாதிகள் பிடித்துச் சென்றுள்ள, 40 இந்தியர்களும், பயங்கரவாதிகளின் போர்க்கருவிகளை சுமந்து செல்லும் கூலிகளாகவும், சமையல்காரர்களாகவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க விமானப்படைகள், வான்வெளி தாக்குதல் நடத்தினால் அல்லது பாக்தாத் நகரை முற்றுகையிடும் போது, ஈராக் ராணுவத் தாக்குதலில் இருந்து தங்களை காத்துக் கொள்ள, பிடித்து வைத்துள்ள இந்திய தொழிலாளர்களை, மனிதக் கேடயமாகப் பயன்படுத்த, பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால், பயங்கரவாதிகள் பிடியில் உள்ள இந்தியர்கள் உயிருக்கு எந்நேரமும் ஆபத்து உள்ளது.இவ்வாறு, தப்பி வந்த ஹர்ஜித் சிங் கூறினார்.

அணை தப்புமா?

சன்னி பிரிவு முஸ்லிம்களின் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், தலைநகர் பாக்தாத் நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், அந்த பயங்கரவாதிகளின் ஒரு பிரிவினர், மேற்கு பகுதி மாகாணத்தில் உள்ள மூன்று முக்கிய நகரங்களை கைப்பற்றிஉள்ளனர்.குவைம், ராவாஹ் மற்றும் அனாஹ் ஆகிய மூன்று நகரங்களை கைப்பற்றியுள்ள பயங்கரவாதிகள், அங்குள்ள பிரமாண்ட அணையைக் கைப்பற்றி, அதை தகர்த்து, அணையின் கீழ் பகுதியில் உள்ள மக்களுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, ராணுவத்தின் அதிரடிப் படை வீரர்கள், 2,000 பேரை, அந்த அணையின் பாதுகாப்பிற்கு, ஈராக் அரசு அனுப்பி வைத்துள்ளது.