இராக்கில் தால் அஃபார் விமான நிலையத்தை தீவிரவாதிகள் திங்கள்கிழமை கைப்பற்றி ராணுவத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கினர். இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
தால் அஃபார் நகர் மற்றும் அங்குள்ள விமான நிலையம் முழுவதும் தீவிரவாதிகளின் கட்டப்பாட்டுக்குள் சென்றுவிட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சிரியா எல்லையையொட்டிய இந்தப் பகுதியில் நினிவே மாகாணம் மட்டும் தீவிரவாதிகளின் பிடியில் சிக்காமல் உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
“”மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஜான் கெர்ரி, பாதுகாப்பு காரணம் கருதி ஜோர்டான் சென்று அங்கிருந்து பாக்தாத் சென்றடைந்தார்.
அங்கு பிரதமர் நூரி அல்-மாலிக்கி மற்றும் அந்நாட்டின் அனைத்து அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேசினார்.
இராக்கில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தேவையான உதவிகளை அமெரிக்கா செய்வது தருவது குறித்து விவாதிக்கும் ஜான் கெர்ரி, அந்நாட்டில் ஒன்றுபட்ட புதிய அரசை அமைக்க அங்குள்ள அரசியல் தலைவர்களை வலியுறுத்துவார்” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஜென் சாகி செய்தியாளர்களிடம் கூறினார்.
விமானப்படை குண்டு மழை: இதனிடையே, தீவிரவாதிகளை குறிவைத்து இராக் அரசு வான் வழித் தாக்குதலில் ஈடுபட்டது. முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த ஊரான திக்ரித் நகரில் விமானப்படை குண்டு மழை பொழிந்ததில் 7 தீவிரவாதிகள் உயிரிழந்தனர் என்றும், மொசூல் நகரிலும் விமானத்தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், திக்ரித்தின் கிழக்கில் அல்-அலாம் பகுதியில் பாதுகாப்புப் படை மற்றும் பழங்குடியின அரசு ஆதரவு போராளிகளுடன் தீவிரவாதிகள் மோதலில் ஈடுபட்டதில் மாகாண ஆளுநரின் ஆலோசகர் கொல்லப்பட்டார்.
கைதிகள் உள்பட 99 பேர் சாவு: இராக்கின் தெற்கு பாக்தாத் பகுதியில் கைதிகளை ஏற்றிக்கொண்டு அணிவகுத்துச் சென்ற ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில் 69 கைதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாபில் மாகாணம் ஹாஷிமியா பகுதியில் நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதலின்போது ஏற்பட்ட மோதலில் ஒரு போலீஸ்காரர் மற்றும் 8 தீவிரவாதிகளும் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர்.
மேலும், தீவிரவாதிகள் ராவா மற்றும் அனா ஆகிய நகரங்களை கைப்பற்றியதால் அந்த நகரங்களில் இரு நாள்களாக நிகழ்ந்த வன்முறையில் உள்ளூர் தலைவர்கள் 21 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ராணுவம் திணறல்
தீவிரவாதிகளின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் இராக் படை முக்கிய நகரங்களை தொடர்ந்து இழந்து வருவதால், ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை அகதிகளாக வெளியேறி வருகின்றனர். இந்தத் தாக்குதல் தொடர்ந்தால் நாடே சிதைந்து போகும் அச்சம் நிலவுவதாகக் கூறப்படுகிறது.
இராக் மற்றும் சிரியா ஆகியவற்றின் ஒரு பகுதியை இணைத்து இஸ்லாமிய நாட்டைத் தோற்றுவிப்பது இ.எஸ்.இ.எல் தீவிரவாதிகளின் நோக்கம் என்றும், இதில் சிரியா அதிபர் பஷார் அல் அஸாத்துக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் பங்கும் உள்ளது என்றும் கூறப்படுகிறது.
இன்னும் 50 வருடம் ஈராக்கில் எண்ணை வளங்களை திருட அமெரிக்கா திட்டம் தீட்டுகிறது !