தீவிரவாதிகளால் சிறுமிகள் கடத்தப்படவில்லை: நைஜீரிய அரசு திட்டவட்டம்

nigeria_denies_001நைஜீரியாவில் தீவிரவாதிகளால் சிறுமிகள் யாரும் கடத்தப்படவில்லை என அந்நாட்டு அரசு விளக்கமளித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நைஜீரியாவில் போர்னோ மாகாணத்தில் சிபோக் என்ற இடத்தில், உள்ள மேல்நிலைப்பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவிகளை போகோ ஹாரம் தீவிரவாதிகள் கடத்தி சென்று மறைவிடத்தில் சிறை வைத்தனர்.

மேலும் அரசுப் படைகளால் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தங்கள் இயக்கத்தவர்களை விடுதலை செய்தால் மாணவிகளை விடுவிக்க தயார் என்று அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.

இதனையடுத்து மைடிகுரி நகரில் இருந்து சுமார் 150 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள கும்மாப்சா கிராமத்துக்குள் நுழைந்த தீவிரவாதிகள் 60க்கும் மேற்பட்ட சிறுமிகள், 31 சிறுவர்கள் மற்றும் சில இளம்பெண்களையும் கடத்திச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

ஆனால் இக்கடத்தல் சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை என கூறி அந்நாட்டு அரசாங்கம் மறுப்பு தெரிவித்து வருகின்றது.

இதுகுறித்து அந்நாட்டின் அரசு செய்தி தொடர்பாளரான மைக் ஓமரி கூறுகையில், கடத்தல் நடந்ததாக சாட்சியங்கள் கூறிய போதும், அதற்கான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.