இராக்கில், முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த ஊரான திக்ரித் நகரை தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றும் நோக்கில் ராணுவம் சனிக்கிழமையன்று ஹெலிகாப்டர் மூலம் குண்டுகளை வீசி தீவிர தாக்குதலைத் தொடங்கியது.
இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இராக் அண்டு லெவன்ட் (இ.எஸ்.இ.எல்) தீவிரவாதிகளின் பிடியில் இருவாரங்களுக்கும் மேலாக சிக்கித் தவிக்கும் திக்ரித் நகரை நோக்கி ஆயிரக்கணக்கான இராக் ராணுவ வீரர்கள் முன்னேறியபடி உள்ளனர்.
முதற்கட்டமாக, ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டரில் சென்று தீவிரவாதிகளை குறிவைத்து குண்டுகளை வீசி தாக்குதலை தொடங்கியதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து ஏ.எஃப்.பி. செய்தியாளரிடம் இராக் ராணுவ அதிகாரி சஃபா ஃபாதல்வி கூறுகையில், “”இ.எஸ்.இ.எல். தீவிரவாதிகள் மீதான கடும் ராணுவ நடவடிக்கை சனிக்கிழமை தொடங்கியது. அவர்களுக்கு இரு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று அவர்கள் தப்பியோடுவது; மற்றொன்று அவர்கள் கொல்லப்படுவது” என்றார்.
பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், ரஷியாவிடம் இருந்து இரண்டாம் தர (பழைய) சுகோய் போர் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. அவை இராக் தெற்கு ராணுவப் படைத் தளத்துக்கு சில தினங்களில் வந்து சேரும்” என்று தெரிவித்தனர்.
அமெரிக்க ஆளில்லா விமானங்கள்: இதனிடையே, ராணுவ ஆலோசகர்கள் மற்றும் தூதர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக அமெரிக்க ஆளில்லா விமானங்கள் பாக்தாத் விரைந்தன. அமெரிக்க கண்காணிப்பாளர்கள் மற்றும் குண்டுகள், ஏவுகணைகள் உள்ளிட்ட தளவாடங்களுடன் தனித்தனி போர் விமானங்கள் இராக்கிற்கு சென்றுள்ளதை பென்டகன் உறுதிபடுத்தியுள்ளது.
இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “”அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சில ஆளில்லா விமானங்கள் பாக்தாதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், தீவிரவாதிகளுக்கு எதிராக இத்தகைய விமானங்கள் பயன்படுத்தப்படாது” என்றார்.
விரைவில் புதிய அரசு: ஷியா பிரிவு முஸ்லிம்களின் பிரபல மத குருவான அயதுல்லா அலி அல்-சிஸ்தானி, “”சன்னி பிரிவு தீவிரவாதிகளை எதிர்கொள்ளும் வகையில், அரசியல் தலைவர்கள் ஒருங்கிணைந்து புதிய அரசை விரைவில் அமைக்க வேண்டும். அதேவேளையில், புதிய பிரதமர், அதிபர் மற்றும் நாடாளுமன்ற அவைத்தலைவர் ஆகியோர் அடங்கிய புதிய பிரதிநிதிகளின் சந்திப்பு வரும் செவ்வாய்க்கிழமை நடைபெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் நூரி அல்-மாலிக்கிற்கு நெருக்கடி: ஏற்கெனவே, அனைத்துப் பிரிவு முஸ்லிம் பிரதிநிதிகளும் இடம்பெறும் வகையில் புதிய அரசை அமைக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில், அதே கருத்தை அல்-சிஸ்தானி தொடர்ந்து வலியுறுத்தி வருவது பிரதமர் நூரி அல்-மாலிக்கிற்கு நெருக்கடியை அதிகரித்துள்ளதாக கருதப்படுகிறது.
“இராக்கில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரால் கடந்த 6 மாதங்களில் மட்டும் 12 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். அந்நாட்டின் வடக்குப் பகுதியில் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் கிராமங்களில் இருந்து சில நாள்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக வெளியேறியுள்ளனர். எனவே, தீவிரவாதிகளால் ஏற்பட்டுள்ள விளைவுகளை எதிர்த்துப் போராட வேண்டும்’ என்று சர்வதேச அமைப்புகள் அபாயக் குரல் எழுப்பிய வண்ணம் உள்ளன.