அமெரிக்க அரசு உக்ரைனை தூண்டி விடுவதாக ரஷியா சனிக்கிழமை குற்றம்சாட்டியது. ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மாஸ்கோவில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பதிலில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்., “” உக்ரைன் தலைவர்களை மோதலில் ஈடுபடச் செய்யும் முயற்சியில் அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். உக்ரைன் விவகாரம் விரைவில் முடிவுக்கு வருவது ரஷியா மற்றும் ஐரோப்பிய யூனியனையே சார்ந்தது” என்றார்.
உக்ரைன்-ஐரோப்பிய யூனியன் இடையே வெள்ளிக்கிழமை வர்த்தக மற்றும் பொருளாதார உடன்படிக்கைகள் கையொப்பமாயின.
இதற்கிடையே, உக்ரைன் விவகாரத்தை ரஷியா கைவிடாவிட்டால் அந்நாடு மீது மேலும் சில பொருளாதாரத் தடைகளை விதிக்க இருப்பதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை மிரட்டல் விடுத்துள்ளன.
ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் வெள்ளிக்கிழமை கூறுகையில், “ரஷியாவும், கிளர்ச்சியாளர்களும் வன்முறையை கைவிடவேண்டும், உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோஷென்கோவின் அமைதித் திட்டப்படி போர் நிறுத்தத்தை மேற்கொள்ள ஒப்புக்கொள்ள வேண்டும்’ என்று வலியுறுத்தினர்.
உக்ரைன் கோரிக்கை: இதற்கிடையே, உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களுடனான போர் நிறுத்தத்தை திங்கள்கிழமை வரை நீட்டிப்பதாக அந்நாட்டு அதிபர் பெட்ரோ போரோஷென்கோ அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இந்த போர்நிறுத்த ஒப்பந்த நீட்டிப்பை பயன்படுத்தி இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை ரஷியா மேற்கொள்ள வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.