ஈராக்கில் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்ட திக்ரித் நகர் மீது அதிரடி தாக்குதல் நடத்திய அந்நாட்டு ராணுவம் மீண்டும் கைப்பற்றியுள்ளது.
கடந்த ஒன்பதாம் திகதி ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மொசூலை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர். தொடர்ந்து அடுத்த இரண்டு நாளில் முன்னாள் ஜனாதிபதி சதாம் உசேனின் சொந்த ஊரான திக்ரித்தையும் கைப்பற்றினர். இதையடுத்து தொடர்ந்து தலைநகர் பாக்தாத் நோக்கி தீவிரவாதிகள் முன்னேறினர்.
இந்த நிலையில் திக்ரித்தை மீண்டும் கைப்பற்றுவதற்கு ஈராக் படைகள் திட்டம் தீட்டின. அவர்களுக்கு வேண்டிய ஆலோசனைகளை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவால் அனுப்பி வைக்கப்பட்ட ஆலோசகர்கள் வழங்கினர்.
நேற்று முன்தினம் அரசு படை ஹெலிகாப்டர்கள் திக்ரித் நகரில் தீவிரவாதிகளை குறிவைத்து குண்டுமழை பொழிந்தன. பீரங்கி தாக்குதலும் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதல்களில் தீவிரவாதிகள் நிலைகுலைந்து போயினர். குண்டுவீச்சில் 60 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். திக்ரித் நகரை அரசு படைகள் மீட்டன. இந்த ஈராக் தேசிய தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த வெற்றியை தொடர்ந்து மொசூல் நகரை கைப்பற்றுவதற்கான திட்டங்களை ஈராக் அரசு படைகள் தீட்டி வருகின்றன.
திக்ரித்தில் கடும் சண்டை நடந்ததை தீவிரவாதிகள் தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். அதே நேரத்தில் திக்ரித்தில் இன்னும் தீவிரவாதிகளின் கட்டுப்பாடு இருப்பதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.




























