இராக்கில் இஸ்லாமிய தனி நாடு: தீவிரவாதிகள் அறிவிப்பு

  • சிரியாவின் லடாக்கியா நகரை அடுத்த காரோ கிராமத்தில் உள்ள மலைப் பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை ஞாயிற்றுக்கிழமை ராணுவம்  பீரங்கி மூலம் அதிரடித் தாக்குதல் நடத்தி விரட்டியடித்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.  
    சிரியாவின் லடாக்கியா நகரை அடுத்த காரோ கிராமத்தில் உள்ள மலைப் பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை ஞாயிற்றுக்கிழமை ராணுவம்  பீரங்கி மூலம் அதிரடித் தாக்குதல் நடத்தி விரட்டியடித்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.  

இராக் மற்றும் சிரியாவில் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை கிலாஃபத் கோட்பாட்டைப் பின்பற்றும் தனி இஸ்லாமிய நாடாக சன்னி பிரிவைச் சேர்ந்த இ.எஸ்.இ.எல். தீவிரவாதிகள் திங்கள்கிழமை அறிவித்தனர்.

இந்த நிலையில், தீவிரவாதிகளின் பிடியில் உள்ள நகரங்களை மீட்க இராக் ராணுவம் இடைவிடாமல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இது குறித்து பாக்தாதில் செய்தியாளர்களிடம் அந்நாட்டு ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் காசிம் அட்டா கூறுகையில், “”திக்ரித் நகரை சுற்றி பல்வேறு பகுதிகளில் இருந்து பாதுகாப்புப் படை முன்னேறி வருகிறது. அங்கு ராணுவத்துக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நீடித்து வருகிறது.

ராணுவ வீரர்கள் அந்த நகருக்குள் நுழையும் அனைத்து வழிகளிலும், தீவிரவாதிகள்  இரு வாரங்களுக்கு முன் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடிகள் செயல் இழக்கச் செய்யப்பட்டன.

அமெரிக்க ராணுவ ஆலோசகர்களின் ஒத்துழைப்புடன், தீவிரவாதிகளின் இலக்குகளை குறிவைத்து இராக் ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது” என்றார்.

இந்நிலையில், இராக் ராணுவத்தின் வான் வழித் தாக்குதலுக்கு உதவும் வகையில், தனது போர் விமானங்களை ரஷியா தொடர்ந்து வழங்கி வருகிறது.

சதாம் உசேன் மாளிகை தகர்ப்பு? இதனிடையே, திக்ரித்தில் உள்ள முன்னாள் அதிபர் சதாம் உசேன் மாளிகை வளாகத்திற்குள் ராணுவ விமானங்கள் குண்டுகளை வீசியதில் பெரும் புகைமண்டலமாக காட்சியளித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

ராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையிலும், தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை ஒருங்கிணைத்து தனி இஸ்லாமிய நாடாக இ.எஸ்.இ.எல். தீவிரவாதிகள் அறிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள அலெப்போ முதல் ஈராக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள டியாலா மாகாணம் வரையுள்ள பகுதிகளை இவ்வாறு தனி இஸ்லாமிய நாடாக இ.எஸ்.இ.எல். தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர். மேலும், தங்களது அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதியை புதிய கலிஃபா (இஸ்லாமிய மதத்தை வழிநடத்தும் நபிகளின் வாரிசு அதாவது மதத் தலைவர்) என்று அறிவித்துள்ளதுடன், இனிமேல் அவர் கலிஃபா இப்ராஹிம் என்று அழைக்கப்படுவார் எனவும் தெரிவித்துள்ளது.

குர்து பிராந்திய விடுதலை-இஸ்ரேல் ஆதரவு: இதனிடையே, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசியதாவது:

உலகில் தீவிரவாதிகளுக்கு எதிராக ஜோர்டான் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கும், இராக்கில் குர்து பிராந்தியம் சுதந்திரம் பெறுவதற்கும் சர்வதேச சமுதாயத்தின் ஆதரவு தேவையாக உள்ளது.

ஜோர்டான் தன்னை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் அந்நாட்டில் ஓர் இயல்பான, ஸ்திரமான ஆட்சி ஏற்படுவதை உறுதிப்படுத்துவதே நமது பொதுவான நோக்கமாக இருக்க வேண்டும். இ.எஸ்.இ.எல். தீவிரவாதிகள் ஆதிக்க அலை கவலையை ஏற்படுத்துகிறது. இது எளிதில் ஜோர்டானிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, தீவிரவாதம் மற்றும் அதன் அடிப்படை நோக்கம் ஆகியவற்றை தடுத்து நிறுத்துவது அவசியம் என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.