போர் நிறுத்தத்தை தொடர முடியாது என உக்ரைன் அதிபர் அறிவிப்பு

உக்ரைனில் போர் நிறுத்தத்தை தொடர முடியாது என நேற்று இரவு உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோஷெங்கோ தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் கிழக்கு பகுதியான டன்ட்ஸ்க்கை சுயாட்சி பிரதேசமாக அறிவிக்க வேண்டும் அல்லது ரஷியாவுடன் இணைக்க வேண்டும் என்று கோரி, ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் கடந்த 27–ந்தேதி வரை போர்நிறுத்தம் அமல்படுத்தப்பட்டு இருந்தது.

உக்ரைன் அரசு ஐரோப்பிய யூனியனுடன் கடந்த வெள்ளிக்கிழமை  கூட்டாண்மை உடன்பாடு செய்துகொண்டது. இதைத்தொடர்ந்து இந்த  போர் நிறுத்தத்தை உக்ரைன் அரசு மேலும் 3 நாட்கள் நீட்டித்துள்ளது.

இந்த போர் நிறுத்த நீட்டிப்பு காலம் நேற்று இரவுடன் முடிவடைந்த நிலையில் மீண்டும் போர் நிறுத்தத்தை தொடர முடியாது என  உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோஷெங்கோ தெரிவித்துள்ளார்.  எனினும் உக்ரைன் தனது சமாதான திட்டத்தை கைவிடவில்லை என தெரிவித்துள்ளார்.