உக்ரைனில் பதற்றத்தைத் தணிக்க வேண்டும்

Ethnolingusitic_map_of_ukraineஉக்ரைனின் கிழக்குப் பகுதியில் பதற்றத்தைத் தணிக்க ரஷியா உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகள் வலியுறுத்தி உள்ளன.

இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அதிபர் ஒபாமா, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுடன் வியாழக்கிழமையன்று தொலைபேசியில் பேசினார். அப்போது, உக்ரைனில் போர் நிறுத்தம் தொடர்வதற்காக ராஜீய ரீதியிலான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து இருவரும் விவாதித்தனர்.

அந்தப் போர் நிறுத்த நடவடிக்கைகளை கிளர்ச்சியாளர்களும், அவர்களுக்கு முழு ஆதரவு அளிக்கும் ரஷியாவும் மதிக்க வேண்டும்.

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் பதற்றத்தை தணிக்கும் வகையில் ரஷியா உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

அவ்வாறு நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில் ரஷியா மீது அமெரிக்காவும், ஐரோப்பாவும் பொருளாதார தடை விதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது என இருவரும் ஒப்புக்கொண்டனர்.

மேலும், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பி5பிளஸ்1 (அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி) நடத்தவுள்ள பேச்சுவார்த்தை மற்றும் ஈரான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அணுசக்தி திட்டத்தை அமைதியான முறையில் நிறைவேற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

அமெரிக்கா கண்காணிப்பு: இதனிடையே, அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன், உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோஷென்கோவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு அந்நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து விவாதித்தார்.

உக்ரைனில் அமைதியை நிலைநாட்டும் வகையில் போர் நிறுத்தத்தை தொடரும்படி அவரிடம் ஜோ பிடன் கேட்டுக்கொண்டார்.

மேலும், ரஷியாவின் நடவடிக்கைகளை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. எல்லைக்கு அப்பால் இருந்து கிளர்ச்சியாளர்களுக்கு கனரக ஆயுதங்களை வழங்கி ஆதரவளிக்கும் நிலையில் இருந்து ரஷியா பின்வாங்க தவறினால் அந்நாட்டின் மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்கா தயங்காது என்று போரோஷென்கோவிடம் ஜோ பிடன் தெரிவித்தார் என்று அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.