தீவிரவாத முகாம்கள் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்

pakistan terrorவடக்கு வஜிரிஸ்தானில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் சனிக்கிழமை விமானப்படைத் தாக்குதல் நடத்தியது. இதில் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் ராணுவம் மீது தீவிரவாதிகளும் பதில் தாக்குதல் நடத்தினர். இது குறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அஸிம் பாஜ்வா கூறுகையில், “வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் 5 மறைவிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில், தீவிரவாதிகளின் பதுங்கு குழிகள், துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருள்கள் அழிக்கப்பட்டன.

இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்’ என்று தெரிவித்தார்.

ஆப்கன் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள வடக்கு வஜிரிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது கடந்த ஜூன் 15ஆம் தேதி முதல் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

அதில், இதுவரை 386 தீவிரவாதிகளும், 20 பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர். சுமார் 6 லட்சம் பேர் அங்கிருந்து இடம் பெயர்ந்து தாற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.